கடந்த ஒரு வாரத்தில் கோட்டா ஸ்ரீனிவாசராவ், சரோஜா தேவி, மு.க.முத்து உள்ளிட்ட 6 பிரபலங்களின் அடுத்தடுத்த மறைவால் தென்னிந்திய திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 6 south india celebreties died in a week

கோட்டா ஸ்ரீனிவாசராவ்
கடந்த 13ஆம் தேதி தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த மூத்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசராவ் காலமானார். அவருக்கு வயது 83. 1978ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் சாமி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது. வயது மூப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

சரோஜா தேவி
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் படங்களில் வெற்றிகரமான கதாநாயகியாக நடித்து வலம் வந்தவர் சரோஜா தேவி. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் நாட்டின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெற்றவர். வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 87.

வேலு பிரபாகரன்
சர்ச்சைக்குரிய இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் என பல்வேறு பரிணாமங்களுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் வேலு பிரபாகரன். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று ஜூலை 18 உயிரிழந்தார். அவருக்கு வயது 68.

மோகன் ராஜ்
பா.ரஞ்சித் இயக்கி வரும் வேட்டுவம் படத்தில் கார் ஸ்டண்ட் மாஸ்டராக் பணியாற்றி வந்தார் மோகன் ராஜ். கடந்த 13ஆம் தேதி கார் சண்டைக்காட்சியின்போது ஏற்பட்ட எதிர்பாரா விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனையடுத்து அலட்சியமாக செயல்பட்டது, கவனக்குறைவாக இருந்தது என இயக்குநர் பா.ரஞ்சித், ராஜ்கமல், வினோத், பிரபாகரன் ஆகிய நான்கு பேர் மீது 3 பிரிவுகளில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிஷ் வெங்கட்
தெலுங்கு சினிமாவில் காமெடி மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர் ‘பிஷ்’ வெங்கட். 53 வயதான இவர் சிறுநீரகம் செயலிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 18) ஹைதராபாத்தில் காலமானார்.

மு.க. முத்து
கலைஞரின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சசோகதரருமான மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77. ஒரு காலத்தில் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக நடிகராக அறிமுகமான மு.க. முத்து, தனது படங்களின் அடுத்தடுத்த தோல்வியால் விலகினார். எனினும் தனது தனித்துவமான குரலால் பாடிய ’நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’, ’சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ ஆகிய பாடல்களால் இன்றும் நினைவுக்கூறப்படுகிறார்.
