சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (ஜூலை 28) நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழாவில் பங்குபெறும் கலைநிகழ்ச்சி குழுவில் உள்ள 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 180 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதனையொட்டி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்று விழாவினை துவக்கிவைக்க உள்ளார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக துவக்க விழாவில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள 900 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து உடனடியாக 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே உற்றுநோக்கி நோக்கி வருகிறது.
இந்நிலையில் துவக்க விழாவில் பங்கேற்க உள்ள நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா