44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், அர்மேனிய வீரர் கேப்ரியல் சர்கிசியனை 41வது நகர்த்தலில் வீழ்த்தினார். நடப்புத் தொடரில் அவர் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் குகேஷ் வெற்றிபெற்றுள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று (ஆகஸ்ட் 3) இந்தியா ஓபன் அணி ஏ பிரிவு உஸ்பெகிஸ்தானையும், இந்தியா ஓபன் அணி பி பிரிவு அர்மேனியாவையும், இந்தியா ஓபன் அணி சி பிரிவு லிதுவேனியாவையும் எதிர்கொண்டன.
நேற்றைய (ஆகஸ்ட் 2) போட்டியில் ஸ்பெயின் வீரரிடம் தோல்வியடைந்த பிரக்ஞானந்தாவுக்கு இன்று (ஆகஸ்ட் 3) ஓய்வளிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக ரோனக் சத்வானி பங்கேற்றார். அதுபோல், கார்த்திகேயன் முரளிக்குப் பதிலாக அபிஜித் குப்தா விளையாடினார். மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி ஜார்ஜியாவையும், இந்திய மகளிர் பி அணி செக் குடியரசையும், சி அணி ஆஸ்திரேலியாவையும் சந்தித்தன.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 3) இந்திய அணியின் பி பிரிவில் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய தமிழக வீரர் குகேஷ், அர்மேனிய வீரர் கேப்ரியல் சர்கிசியனை எதிர்கொண்டார். அவர், 41வது நகர்த்தலில் அர்மேனிய வீரரை வீழ்த்தினார். நடப்புத் தொடரில் அவர் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் குகேஷ் வெற்றிபெற்றுள்ளார்.
இந்திய ஓபன் அணி ஏ பிரிவில் கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஹரிகிருஷ்ணா, உஸ்பெகிஸ்தான் வீரர் அப்துச்தோரோவ் நோடிர்பெக்கை 34வது நகர்த்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார்.
இந்திய மகளிர் அணியின் ஏ பிரிவில் வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய தமிழக வீராங்கனை வைஷாலி, ஜார்ஜியாவின் ஜவகிஷ்விலி லேலாவை 36வது நகர்த்தலில் வீழ்த்தினார்.
ஜெ.பிரகாஷ்
செஸ் ஒலிம்பியாட்: 5வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி!