”அதிமுக ஆட்சியை அகற்ற திமுகவுடன் சேர்ந்திருக்கிறோம்” – ஜவாஹிருல்லா நேர்காணல்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

ஒரு கல்லூரிப் பேராசிரியராக தன் வாழ்வைத் துவங்கிய மு.ஹி.ஜவாஹிருல்லா இன்று தமிழகம் அறிந்த அரசியல் தலைவர்.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் (காலன்குடியிருப்பில்) பிறந்து 1985 முதல் கல்லூரி பேராசிரியராகவும், வாணியம்பாடி இஸ்லாமிய கல்லுரியில் வணிகவியல்துறைத் தலைவராக பணியாற்றி 2009 -ல் விருப்பஓய்வு பெற்றார். பின்னர் முழு நேர அரசியலுக்கு வந்து 2011 – சட்டமன்ற தேர்தலில் இராமநாதபுரத்திலிருந்து மனிதநேய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் இஸ்லாமிய மக்களை ஒருங்கிணைத்து இயக்கமாக்கியதில் பேராசிரியரின் பணி அளப்பரியது.தேர்தல் அரசியலுக்கு அப்பால் தமிழகத்தின் அனைவரின் நன்மதிப்பையும் பெற்ற பேரா. ஜவாஹிருல்லா. இந்த தேர்தலில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தமிழக அரசியல் அரங்கின் எதிர்பார்ப்பு. திமுகவோடு கூட்டணி சேர்ந்திருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் நிறுவனர் பேரா. ஜவாஹிருல்லா வுடனான நேர்காணல் இது,

மீண்டும் திமுக. ஏன்?

ADVERTISEMENT

அதிமுக ஆட்சியில் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கடைசிவரை இருந்தது. முழுமையான மதுவிலக்கு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருக்கும் வாழ்நாள் சிறைவாசிகளை விடுவிப்பது போன்ற கோரிக்கைகள் ஆகட்டும், சிறுபான்மை மக்கள் எதிர்பார்த்த தேவாலயம், மசூதி தொடர்பான பட்டா நிலங்கள், தமிழ்நாடு கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தில் சில திருத்தங்கள் போன்ற கடந்த தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளாகட்டும். நிறைவேற்றுவார்கள் என்று நினைத்தோம். இறுதிவரை நிறைவேற்றவில்லை. எனவே, திமுக கூட்டணிக்குச் சென்றிருக்கிறோம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி. பின்னர் மக்கள் நலக் கூட்டியக்கம். இப்போது மீண்டும் திமுக. எதனால் இந்த தொடர் தாவல்கள்?

ADVERTISEMENT

தேர்தல் வந்தால்தான் கூட்டணி வரும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற அமைப்பில்தான் நாங்கள் இருந்தோம். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அந்த இயக்கத்தைக் கூட்டும் போது, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை எதிர்ப்பதற்கான கூட்டமைப்பு என்றுதான் கூட்டினார். அரசியல் கூட்டணி அல்லாத இயக்கம் என்ற தெளிவோடுதான் இணைந்தோம். ஆனால் கோவில்பட்டி கூட்டத்தில் எங்களைக் கேட்காமல், சொல்லப்போனால் திருமாவையும் கூட கேட்காமல், ஆலோசனை இன்றி தன்னிச்சையாக இது கூட்டணிதான் என்று முத்தரசனும், வைகோவும் அறிவித்தார்கள். அதன்பின்னர் நாங்கள் கூடி விவாதித்தபோதும் அதேநிலையைத்தான் பின்பற்றினார்கள். அவர்களோடு அரசியல் கூட்டணி வைத்துக்கொள்ளும் மனநிலையில் நாங்கள் இல்லை என்பதனால் அந்தக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினோம். தற்போது அதிமுக ஆட்சியை அகற்றவேண்டும் என்பதற்கு திமுகவுடன் கூட்டணி வைப்பதுதான் சரி என்பதனால் திமுகவுடன் சேர்ந்திருக்கிறோம்.

சில மாதங்களுக்கு முன்னர் கூட்டணி தொடர்பான விஷயங்களில், அதிமுகவுக்கு 70 மதிப்பெண்ணும், திமுகவுக்கு 35 மதிப்பெண்ணும் தான் வழங்குவேன் என்றீர்கள். கூட்டணி மதிப்பெண் அதற்குள் மாறிவிட்டதா?

ADVERTISEMENT

அப்படிச் சொன்னதை நான் மறுக்கவில்லை. உண்மைதான். அன்று இருந்த ஆதங்கத்தில் அப்படிச் சொன்னேன். இப்போது அது சரிசெய்யப்பட்டுவிட்டது.

உங்களுக்காகட்டும், வெளியேறிய, வெளியேற்றப்பட்ட பிற கட்சிகளுக்காகட்டும் அதிமுக கூட்டணியோடு என்னதான் பிரச்சனை?

கூட்டணிக்கட்சித் தலைவர்கள் தங்கள் கோரிக்கைளை நேரில் சந்தித்து பேசுகின்ற ஒரு சூழ்நிலை இல்லை. எல்லாமே ஒருவழிப்பாதையாக இருக்கிறது. அந்தவகையில் கூட்டணியை அரவணைத்துச் செல்லும் நிலை இல்லை. இதை எல்லோரும் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறார்கள்.

மக்கள் நலக் கூட்டணி தங்களுக்கும், அதிமுகவுக்கும் மட்டும்தான் போட்டி என்கிறார்களே?

அவர்கள் வெறும் காகிதப்புலிகள். இதையெல்லாம் பேசலாம்… ஆனால் நடைமுறை எதார்த்தம் தெரியாமல் பேசுகிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்.

திமுக – காங்கிரஸ் வலுவில்லாத கூட்டணி என்ற விமர்சனம் இருக்கிறது. இந்த நிலையில் கூட்டணிக்கு சேர்ந்திருப்பது பற்றி?

என்னை பொறுத்தவரையில் திமுக, காங்கிரஸ், மனிதநேய மக்கள கட்சி, இந்திய முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் இணைந்திருக்கும் கூட்டணி மற்ற கூட்டணிகளை விட வலுவான கூட்டணிதான். மத்தியில் உள்ள பாஜக அரசின் வகுப்புவாத, மதவிரோத ஆட்சியின் போக்கு தமிழ்நாட்டிலும் தலைதூக்கிவிடக் கூடாது என்று அமைந்த கூட்டணி. பலதரப்பட்ட மக்களையும் இணைக்கும் கூட்டணி இதுதான்.

ஆனால், பாஜக கூட்டணிக்கு சென்றுள்ள சதக்கத்துல்லா காங்கிரஸ் முஸ்லீம்களை பிச்சையெடுக்கவிட்டு பிழைத்தது என்கிறாரரே?

இந்த சதக்கத்துல்லா… ஷேக் தாவூத் ஆகியோரெல்லாம் தனிநபர் கட்சிகள். அவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் தவிர கட்சியில் யாரும் இல்லை. சுயமுகத்துடன் வரக்கூடிய அருகதை கூட இல்லாதவர்கள். அவர்களைப் போன்றவர்கள் பேசுவதற்கு பதில்சொல்ல வேண்டியதில்லை என்பதுதான் எங்களது கருத்து. பாஜகவை வெறும் முஸ்லீம் விரோத அரசாக மட்டுமே நாங்கள் பார்க்கவில்லை. பலதரப்பட்ட மக்களும் போராடி பெற்ற நம் சுதந்திரத்தின் சாரமாக உள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை கொள்கையையே சிதைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். சதக்கத்துல்லாவை போன்றவர்களுக்கு அது புரியாது. அதனால் தவறான போக்கை கடைப்பிடித்து கூலிக்கு வேலைபார்க்கிறார்கள்.

எல்லோரும் முன்வைக்கும் திமுக, அதிமுகவுக்கு எதிரான மாற்று அரசியல் என்ற கோஷம் இதுவரை உங்களிடம் இல்லை. இப்போதுள்ள அரசியலே போதும் என்று நினைக்கிறீர்களா?

மாற்று அரசியலை முன்வைத்துதான் நாங்கள் கட்சியே தொடங்கினோம். எங்கள் கட்சியில் உள்ள கவுன்சிலரோ, சட்டமன்ற உறுப்பினரோ யாரும் கையூட்டு வாங்குவதில்லை. எந்த லஞ்ச லாவண்யம், ஊழலில் ஈடுபடுவதில்லை. ஆனால், இன்று தமிழகத்தில் இருக்கும் சூழலில் எந்தவொரு ஆட்சி மாற்றம் என்பதும் ஒன்று திமுக தலைமையிலான கூட்டணியாலோ (அ) அதிமுக தலைமையிலான கூட்டணியாலோதான் சாத்தியம்.

அப்படியானல் கூட்டணிக்காக கொள்கைகளை சமரசம் செய்துகொள்கிறீர்கள். சரிதானே?

நாங்கள் எப்போதும் அப்படி செய்யவில்லை. நாங்கள் சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசுவதில்லை. பொதுவாக எல்லாவிதமான பிரச்சனைகளையும் பேசுகிறோம், செயல்படுகிறோம்.

இந்தியா முழுவதுமே மாறுபட்ட முடிவுகளை எடுக்கும் பல்வேறு முஸ்லீம் இயக்கங்கள் இருக்கின்றன. ஒரு சிறுபான்மைச் சமூகத்துக்குள் எதனால் இந்த அரசியல் பிளவு?

ஜனநாயகத்தில் இதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஒரு சதக்கத்துல்லா பின்போ, ஷேக்தாவூத் பின்போ சமூகம் திரளவில்லை. யார் சுயநலமில்லாமல் செயல்படுவார்களோ அவர்கள் பின்புதான் மக்கள் நிற்கிறார்கள்.

மக்கள் உங்கள் பின்னால் இருக்கிறார்கள் என்கிறீர்கள். ஆனால் உங்கள் கட்சி உடைந்திருக்கிறது. இது நீங்களும் பத்தோடு பதினொன்று என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறதே?

ஒரு தனிநபர் விலகியதால் கட்சி பலவீனம் அடையவில்லை. அதற்கு சான்றுதான் வாழ்நாள் சிறைக்கைதிகளை விடுவிக்கக் கோரி மூன்று பெருநகரங்களில் நாங்கள் செய்த போராட்டம். அந்த நபரின் சுயநலத்தை புரிந்துகொண்டு பிரிந்து சென்றவர்கள் கூட மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

திராவிட இயக்கங்கள் சமூகநீதிக் கொள்கைகளை விட்டுவிட்டன என்ற குற்றச்சாட்டை சிறுபான்மைச் சமூகத்திலிருந்து படித்து முன்னேறிய நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

அப்படி வெறுமனே குற்றம்சொல்லிவிட முடியாது. திராவிட இயக்கங்கள்தான் சமூகநீதி பூமியான தமிழகத்தில் பலவற்றைச் செய்திருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் முஸ்லீம்களை சேர்த்ததும், தனி ஒதுக்கீடு வழங்கியதும் திராவிட இயக்கங்கள்தான்.

பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் முஸ்லீம் சமூகத்தில் ஒரு பிணைப்பு ஏற்பட்டது. ஆனால், அரசியல் முன்னகர்வுகள் எதுவுமே இல்லையே?

முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் மே.வங்கம், உ.பி, பீகார் மாநிலங்களில் அடிப்படையான கட்டமைப்பு இல்லை. அகில இந்திய அளவில் வழநடத்திச் செல்லும் வகையில் தலைமையும் இல்லை. அதுதான் காரணம்.

இது ஒரு சிறுபான்மைச் சமூகத்தை ஜனநாயக அரசியலில் பலவீனமாக்காதா?

இல்லை… தமிழகத்தை நீங்கள் எடுத்துக்கொண்டால் கூட முஸ்லீம் லீக் இல்லையென்றால் மனிதநேய மக்கள் கட்சிதான் தொடர்ந்து வலுவோடு உள்ளது. புதிய கட்சிகளால் ஒரு கவுன்சிலர் கூட வெல்ல முடியாது. எனவே, பாதிப்பில்லை என்றே நினைக்கிறேன்.

தமிழகத்தில் மதவாதத்தைத் தாண்டி, சாதி வாதம் ஆதிக்கம் செலுத்துவதாக நினைக்கிறீர்களா?

நிச்சயமாக இது கவலைக்குறிய ஒரு விஷயம். தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என பாடநூல்களிலும், அரசியலமைப்புச் சட்டத்திலும் இருக்கிறது. ஆனால் அதைத் தாண்டி இது வளர்கிறது என்றால் இதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

ஒரு பேராசிரியராக இருந்து சொல்லுங்கள். கருணாநிதி, ஜெயலலிதா ஒப்பீட்டளவில் யார் சிறந்த நிர்வாகி? யாருக்கு அதிக மதிப்பெண்?

ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு. எனவே ஒப்பிடக்கூடாது.

அப்போது மாணவர்கள்?

(சிரிக்கிறார்)

மதிப்பெண்களை மே 16 வழங்கும்.

– விவேக் செ

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel