டிஜிட்டல் திண்ணை

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

ஸ்டாலின் – விஜயகாந்த் சந்திப்பு?

‘‘திமுக-வுடன் கூட்டணி அமைந்துவிடும் என்ற நம்பிக்கை தேமுதிக-வினருக்கு இன்னும் குறையவே இல்லை. மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் என ஒவ்வொருவருமே, ‘பேசிட்டு இருக்காங்க… நல்லபடியா முடிஞ்சிடும்!’ என்றே, நம்பிக்கையோடு சொல்லி வருகிறார்கள். நேற்று, பிரேமலதாவுக்கு பிறந்தநாள். விஜயகாந்த் குடும்பமும், சுதீஷ் குடும்பமும் மட்டும் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு இரவு சாப்பிடப் போயிருக்கிறார்கள். குடும்பத்தினருடன் நீண்டநேரம் விஜயகாந்த் மனம்விட்டுப் பேசிக்கொண்டு இருந்தாராம். ‘யாரும் கவலைப்படாதீங்க. எல்லாம் நல்லதாகவே நடக்கும்!’ என்றும் அவர் சொன்னதாகச் சொல்கிறர்கள்.

ADVERTISEMENT

கடந்த, சில தினங்களாக மாவட்டச் செயலாளர்களிடம் விஜயகாந்த் தொடர்ந்து பேசிவருகிறாராம். ‘உங்க மாவட்டத் தலைநகர்ல பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. சீக்கிரமே தேதி சொல்றேன். உங்க மாவட்டத்துல இருக்கும் தொகுதியில் யாரு போட்டி போடுவதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா? சுதீஷ் தலைமையில வேட்பாளரை தேர்வுசெய்யும் குழு வேலை பார்த்துட்டு இருக்காங்க. அவங்ககூட பேசுங்க…’ என்றெல்லாம் சொல்லி வருகிறாராம். ’கேப்டன் போன் எல்லாம் பண்ணி பேசுறாரே…’ என்று சந்தோஷத்தில் இருக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள். மற்ற நேரங்களில் எல்லாம் கே.டிவி-யிலும், கேப்டன் டிவி-யிலும் அவர் நடித்த படங்களை ரீவைண்ட் ராகம்போல பார்த்து மகிழ்ந்தபடி இருக்கிறாராம் விஜயகாந்த்’’ என்று, ஸ்டேட்டஸ் போட்டிருந்தது ஃபேஸ் புக்.

அதைப் படித்து லைக் போட்ட வாட்ஸ் அப் தட்டியதும் விஜயகாந்த் செய்திதான். ‘‘தனித்துப் போட்டி என்று அறிவித்தாலுமேகூட, கருணாநிதிமீது விஜயகாந்த்துக்கு உள்ள பாசம் மட்டும் குறையவே இல்லை. ’ஸ்டாலின், விஜயகாந்த் ரெண்டு பேருமே வர முடியாது. எல்லாம் முடிஞ்சுது’ என்று வைகோ அவங்க கட்சிக்காரங்ககிட்ட சொல்லிட்டு இருக்காராம். இதைச் சொல்றதுக்கு அவர் யாரு? அப்புறம் அழகிரி எதுக்கு கலைஞரைப் பற்றி கமெண்ட் பண்றாரு? கூட்டணிக்குப் போறதும், போகாததும் நம்ம விருப்பம். இதை வெச்சு, அவரை எதுக்கு கிண்டல் பண்ணனும்? கலைஞரோட வயசுக்கு மரியாதை கொடுக்க கத்துக்க வேண்டாமா?’ என்று, சொல்ல ஆரம்பித்துள்ளாராம் விஜயகாந்த். அதனால்தான், திமுக-வைப் பற்றி எதுவும் எதிர்மறையாகப் பேசாமல் அடக்கியே வாசிக்கிறார் விஜயகாந்த். ’எங்கே போவார் விஜயகாந்த்’ என்று பட்டிமன்றம் வைக்காத குறையாக விவாதங்கள் நடந்த சமயத்தில், ‘தனித்துப் போட்டி’ என்று அறிவித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இன்னொருபக்கம் தனித்துப் போட்டி என்று அறிவித்ததும், தேர்தலில் போட்டியிட பணம் கட்டிய வேட்பாளர்கள் சிலர் பணத்தை திருப்பிக்கேட்டு, தேமுதிக அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தனர். ‘கேட்கிறவங்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்துடுங்க!’ என்றும் சொல்லிவிட்டாராம் விஜயகாந்த்.’’

ADVERTISEMENT

அடுத்த ஸ்டேட்டஸுடன் தயாராக இருந்தது ஃபேஸ்புக். ‘‘தேமுதிக கூட்டணி தேவை என்பதில் கருணாநிதி உறுதியாக இருக்கிறார். ‘விஜயகாந்த்கிட்ட பேசுறதுக்கு ஸ்டாலின் போயிருக்கலாம் இல்ல.. எதுக்கு கலாநிதியை அனுப்பணும்?’ என்று சொல்லியபடியே இருக்கிறார். திமுக-வில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் பலர், ஸ்டாலினைச் சந்தித்து வருகிறார்கள். அவர்களிடம், விஜயகாந்த் கூட்டணி அமையாததுபற்றி கேட்கிறாராம் ஸ்டாலின். ‘நீங்க இருக்கீங்க… அதுபோதும். நாம ஜெயிச்சுடலாம்!’ என்று சொல்லிவிட்டு வருகிறார்கள். வெளியில்வரும் அவர்கள், ‘அவர் அப்படி பேசுறதைத்தானே விரும்புறாரு! அதைத்தானே சொல்ல முடியும்’ என்று புலம்பியபடியே போகிறார்களாம்.

ADVERTISEMENT

’தேமுதிக கூட்டணி அமையாமல் போனதுக்கு நீங்கதான் காரணம் என்று சொல்லிவிடக் கூடாது, அதனால், கடைசியாக விஜயகாந்த்தை நேரில் சந்தித்துப் பேசிவிடலாம்’ என்று ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். அதற்கு, ஸ்டாலினும் தலையாட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள்.’’

இடையில் உள்ளே புகுந்தது ட்விட்டர். ‘‘மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹிருல்லா இன்று திமுக-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஸ்டாலினைச் சந்தித்தபிறகு அவர், விஜயகாந்த்தை திமுக கூட்டணிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதற்கு ஸ்டாலின், ‘அது ஜவஹிருல்லாவின் தனிப்பட்ட விருப்பம்’ என்று சொல்லியிருக்கிறாரே… பிறகு எப்படி அவர் பேசப் போவார்?’’ என்று கேட்டது ட்விட்டர்.

‘‘அப்பா நெருக்கடி இருக்கிறது அல்லவா?’’ என்று, பதிலை கமெண்ட் ஆகப் போட்டது ஃபேஸ்புக்.

வாட்ஸ் அப் அடுத்த தகவலைப் போட்டது. ‘‘பன்னீர்செல்வமும், நத்தம் விஸ்வநாதனும் சிக்கல் எல்லாம் முடிந்து கட்சி அலுவலகத்துக்கு வந்துவிட்டார்கள். பன்னீர்செல்வமும், நத்தமும் உள்ளே வந்தபோது நிர்வாகிகள் எல்லோரும் எழுந்து பவ்யமாக வணக்கம் சொல்லியிருக்கிறார்கள். சின்ன சிரிப்பும், குனிந்ததலை நிமிராமலும் உள்ளே வந்து உட்கார்ந்தார் பன்னீர். அங்கே புதிதாக நியமிக்கப்பட்ட நால்வர் அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், வேலுமணி, தங்கமணி ஆகியோரும் இருந்தனர். நால்வரும் இருவருக்கு வணக்கம் சொல்ல, பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்துகொண்டார்கள். இன்று, காலையில் தொடங்கி 35க்கும் மேற்பட்ட அமைப்புகள் அதிமுக-வுக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்தார்கள். அவர்களுடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பெரும்பாலும் நால்வர் அணியில் உள்ளவர்களே பேசியிருக்கிறார்கள். பன்னீர், இடையிடையே மட்டும் குறுக்கிட்டு சில கேள்விகளைக் கேட்டுவிட்டு அமைதியாகிவிட்டாராம். ஏற்கனவே, ஐவர் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட அமைச்சர் பழனியப்பன் இந்தக் கூட்டத்துக்கு வரவில்லை. கூட்டம் முடிந்ததும், ‘பன்னீரும், நத்தம் விஸ்வநாதனும் மட்டும் முதலில் கிளம்பிவிட்டார்கள். கிளம்பும்போதும் யாரும் அவர்களோடு பேசவில்லை!’’ என்று சொல்லிவிட்டு ஆஃப் லைனுக்குப் போனது.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel