ஆன்லைனில் வந்ததும், செய்தியை அப்டேட் செய்தது வாட்ஸ் அப். ‘’ஜெயலலிதா ரெஸ்ட்டுக்குப் போகும் இரண்டு இடங்கள் கொடநாடு, சிறுதாவூர். எப்போதும் சர்ச்சை என்றால் அதிகம் சிக்குவது கொடநாடுதான். இந்தமுறை சிறுதாவூர் சிக்கியிருக்கிறது. 2013ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் வைகோ மதுவிலக்கை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அந்தவழியாக சிறுதாவூர் பங்களாவுக்கு காரில் போனார் ஜெயலலிதா. வழியில் வைகோ-வைப் பார்த்ததும், காரில் இருந்து இறங்கி நலம் விசாரித்தார் ஜெயலலிதா. இப்போது, வைகோ அந்த சிறுதாவூர் பங்களா பற்றித்தான் தேர்தல் ஆணையருக்குப் புகார் செய்திருக்கிறார். ‘‘கடந்த 27ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா, அடிக்கடி சென்று தங்கும் சிறுதாவூர் பங்களாவுக்கு மிகப்பெரிய கண்டெய்னர் ஒன்று எடுத்துச் செல்லப்பட்டது. தார்பாலின் உறையைப் போட்டு மூடியநிலையில் பத்து லாரிகள் 28.3.2016 அன்று காலை சிறுதாவூர் பங்களாவுக்குள் சென்றுள்ளன. மேலும், உறுதிசெய்யப்படாத தகவலின் அடிப்படையில் சிறுதாவூர் பங்களா வளாகத்துக்குள்ளாக மூடி மறைக்கப்பட்ட நிலவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, சிறுதாவூர் பங்களாவில் தீவிர சோதனை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் வைகோ-வின் புகார். சிறுதாவூர் பங்களாவுக்குள் கண்டெய்னரில் எடுத்துச் சென்றது பணமாக இருக்கும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் புகார்.
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனின் கட்டுப்பாட்டில்தான் சிறுதாவூர் பங்களா இருக்கிறது. இந்த பங்களாவுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அவ்வளவு எளிதில் யாரும் பங்களாவை நெருங்கிவிட முடியாது. பங்களாவைச் சுற்றியிருக்கும் நிலத்தில், இயற்கை முறையில் விவசாயம் நடக்கிறது. பங்களாவுக்குள் உள்ளூர் வேலையாட்கள் யாருக்கும் அனுமதி இல்லை. பெரும்பாலும் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களே உள்ளே தங்கி வேலை பார்க்கிறார்கள். இரவு நேரங்களில் கண்டெய்னர் வருவதும் போவதுமாக இருப்பதை அந்தப் பகுதி மக்களும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். கண்டெய்னரில் என்ன இருந்தது என்பதைச் சொல்லவேண்டியது ஹவுஸ் ஓனர்தானே?’’
வாட்ஸ் அப் செய்தியை வாசித்துவிட்டு ஸ்மைலி போட்டது ஃபேஸ்புக். அப்படியே ஸ்டேட்டஸ்க்கும் தயாரானது. ‘‘வடசென்னை, தேமுதிக மாவட்டச் செயலாளர் யுவராஜ் திமுக-வில் இணைந்துள்ளார். யுவராஜ் மட்டுமல்ல; இன்னும் சில மாவட்டச் செயலாளர்களும், சிட்டிங் எம்எல்ஏ-க்களும் திமுக-வில் இணையத் திட்டமிட்டிருந்தனர். மகேஷ் பொய்யாமொழி வழியாக பேச்சுவார்த்தை நடந்தது. மகேஷிடம் பேசிய எல்லோருமே, ‘எங்களுக்குப் பணம் எதுவும் வேண்டாம். ஆனால், எம்எல்ஏ. சீட் கொடுக்கணும். அதுக்குச் சம்மதம்னா நாங்க கட்சிக்கு வந்துடுறோம். அந்த உறுதிமொழியை ஸ்டாலின் நேரடியாக எங்களுக்குத் தரணும்!’ என்று சொல்லியிருக்கிறார்கள். மகேஷ், இதுதொடர்பாக ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார். ’கட்சிக்கு வந்தா சேர்த்துக்கலாம். ஆனால், சீட்டெல்லாம் கொடுக்க முடியாது. அவங்க கேட்கிற தொகுதியில நம்ம கட்சிக்காரங்க இருப்பாங்க. இடையில இவங்களுக்குக் கொடுத்தா கட்சிக்குள் குழப்பம் வரும். தேர்தல் நேரத்துல அந்த மாதிரியான சங்கடம் வேண்டாம். வரட்டும்… அடுத்த எலெக்ஷன்ல பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டாராம். அதனால், திமுக-வுக்கு வரும் எண்ணத்தில் இருந்தவர்கள் பிரேக் போட்டுவிட்டார்கள்!’’ என்பதை போஸ்ட் செய்தது.
டெல்லி தகவல்களுடன் ஆன்லைனில் வந்தது வாட்ஸ் அப். ‘‘தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் டெல்லிக்குப் போயிருக்கிறார். இன்று காலை ராகுல் காந்தியின் வீட்டில் முகுல்வாஸ்னி, குலாம்நபி ஆசாத், இளங்கோவன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் ராகுல். ‘25 சீட் தருவதாக திமுக-வில் சொல்றாங்க. நாம பேசினால் 30 வரைக்கும் வருவாங்க!’ என்று சொல்லியிருக்கிறார் இளங்கோவன். கடந்த தேர்தல் சமயத்தில் அப்போது அழகிரி, தயாநிதிமாறன் வழியாக 63 சீட் கேட்டு, நெருக்கடி கொடுத்தவர் ராகுல்தான். கருணாநிதி முடியவே முடியாது என மறுத்தபோது அழகிரியும், தயாநிதியும் அவரைச் சமாதானப்படுத்தி சம்மதிக்கவைத்தார்கள். இப்போது ராகுல், ‘நமக்கு 45 சீட் வேணும். அதுவும், ஒரு பார்லிமெண்ட்டுக்கு ஒரு சீட் கட்டாயம் இருக்கணும். அதை திமுக-விடம் பேசுங்க. பிஜேபி-யே தமிழ்நாட்டுல தனித்து நிற்கிறாங்க. நாம ஏன் நிற்கக் கூடாது?’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். ஆக, ராகுல்காந்தி 45 சீட்… இல்லை என்றால் தனித்துப் போட்டி என்பதை யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.’’
வாட்ஸ் அப் செய்தியைப் படித்த ட்விட்டர் அடித்த ட்விட் இது. ‘‘மார்ச் 3ம் தேதி நான் ஒரு ட்விட் அடித்திருந்தேன். அதில், ராகுல்காந்தியை சில மாதங்களுக்கு முன்பு திருநாவுக்கரசர் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் அதிமுக-வுடன் கூட்டணி வைக்கலாம் என்று ராகுல் சொல்லியிருக்கிறார். வாசன், அந்த கூட்டணிக்குப் போக முயற்சிசெய்வதாக திருநாவுக்கரசர் சொல்ல..’வாசன் பார்ட் ஆஃப் த காங்கிரஸ்தானே… அவர் போனால் நாம போகக் கூடாதா?’ என்று கேட்டிருக்கிறார். திருநாவுக்கரசரும் விசயத்தை கார்டனுக்குச் சொல்லியிருக்கிறார். ஆனால், பதில்தான் வரவில்லை’ என்று சொல்லியிருந்தேன். இந்தச் சூழ்நிலையில் திருநாவுக்கரசர், ‘காங்கிரஸ்-க்கு உரிய தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவிடுங்கள். அதன் பிறகு தாமக-வையோ அல்லது வேறு எந்தக் கட்சியையோ சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு தொகுதிகளைப் பிரித்துக்கொடுங்கள். அதற்கு திமுக-வுக்கு உரிமை இருக்கிறது. அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மற்ற கட்சிகளுக்கெல்லாம் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும்வகையில் எந்தக் காரியமும் நடக்கக்கூடாது’ என்று சொல்லியிருக்கிறார். இந்த விஷயங்களை எல்லாம் திமுக உன்னிப்பாகக் கவனித்தபடி இருக்கிறது.’’

ஆஃப் லைனுக்குப் போவதற்கு முன்பு, வாட்ஸ் அப் ஒரு செய்தியை சொல்லிவிட்டுப் போனது. ‘‘அதிமுக-வின் வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 4ம் தேதி, 5ம் தேதி வெளியிடலாம் என ஜோதிடர்கள் சொல்லிவருவதாக நேற்று சொல்லியிருந்தேன் அல்லவா… ஆனால், வளர்பிறையில் வெளியிடுவதுதான் இன்னும் சிறப்பாக இருக்கும் என, கேரள ஜோதிடர் ஒருவர் கார்டனுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார். அதனால் அமாவசைக்குப்பிறகு வரும் வளர்பிறை தினத்தில் வேட்பாளர் பட்டியல் வரலாம். அது, ஏப்ரல் 11ம் தேதியாகவும் இருக்கலாம்!’’,”









