வாட்ஸ் அப் ஆன்லைனில் வருவதும், ஆஃப் லைனில் போவதுமாக இருந்தது. சற்றுநேரத்துக்குப் பிறகு மெசேஜ் ஒன்று வந்து விழுந்தது. ‘’ஜெயலலிதா பங்கேற்கும் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று சென்னை தீவுத்திடலில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், சென்னையில் உள்ள 20 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கிறார் ஜெயலலிதா. இரண்டு தினங்களுக்குமுன்பு, சென்னை மாவட்டச் செயலாளர்களை கார்டனுக்கு அழைத்து பூங்குன்றன் பேசியிருக்கிறார். ‘இது அம்மாவோட முதல் பிரச்சாரக் கூட்டம். அதனால் கூட்டம் பிரமாண்டமா இருக்கணும். என்ன பண்ணுவீங்களோ தெரியாது. கூட்டத்தை கூட்டிட்டு வரவேண்டியது உங்களோட வேலை’ என்ற உத்தரவைப் போட்டிருக்கிறார். வேட்பாளர் மாற்றங்கள் தொடர்ந்தபடி இருந்தாலும், தைரியமாக பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார் ஜெயலலிதா. கடந்த, பிப்ரவரி 29ம் தேதி டிஜிட்டல் திண்ணையில், ‘ஜெயலலிதாவுக்கு ஸ்பெஷல் லிஃப்ட்’ என்ற தலைப்பில், ஆர்.கே.நகர் தொகுதியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவுக்கு அவர் சென்றதுபற்றி எழுதியிருந்தோம். அதில், ‘ஜெயலலிதாவுக்குப் படியேற முடியாது என்பதால் வழக்கமாக விழா மேடைக்கு கார் வரும். ஆனால், இந்தமுறை அதற்கு நோ சொல்லிவிட்டார் ஜெயலலிதா. அதனால் மேடைக்குப் பின்புறத்தில் பிரத்யேகமாக லிஃப்ட் அமைத்திருந்தார்கள். அதாவது, காரிலிருந்து இறங்கிய முதல்வர், மேடைக்குப் பின்புறம் இருந்த லிஃப்ட்வழியாக மேடைக்குச் சென்றார். இந்த லிஃப்டில் இரண்டுபேர் மட்டுமே நிற்கமுடியும். எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்துச் செல்லலாம். ரிமோட்மூலம் இயக்கும் வசதிகொண்டது. தேர்தல் சமயத்தில், ஜெயலலிதாவின் பிரச்சார மேடைகளில் எல்லாம் இந்த லிஃப்டைப் பொருத்த திட்டமிட்டுள்ளனர். 10 அடி உயரமுள்ள மேடையில் ஏறுவதற்கு இந்த லிஃப்ட் வசதியாக இருக்கும். விழா முடிந்ததும் அதே லிஃப்டில் மேடையிலிருந்து கீழே இறங்கினார். ஜெயலலிதா லிஃப்ட்வழியாக ஏறுவது யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் அதிகாரிகள் கவனமாக இருந்தார்கள். விழா முடிந்ததும், அந்த லிஃப்ட் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டது. வெளிநாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் இதுபோன்ற லிஃப்ட் தமிழகத்துக்குப் புதுசு’ என்பதைக் குறிப்பிட்டிருந்தோம். அந்த லிஃப்ட், இன்று தீவுத்திடல் பொதுக்கூட்ட மேடையிலும் பொருத்தப்பட்டுள்ளது. ‘‘வாட்ஸ் அப் தகவலை ஷேர் செய்தது ஃபேஸ்புக்.
தொடர்ந்து, ஃபேஸ்புக் போட்ட ஸ்டேட்டஸும் அதிமுக தொடர்புடையதுதான். ‘‘ஜி.கே.வாசன் அதிமுக-வை ரொம்பவே நம்பியிருந்தார். ஆனால், ஜெயலலிதா எந்தப் பதிலும் சொல்லாமல் அவரை காக்கவைத்தார். விஜயகாந்த் அணி எந்த அளவுக்கு ஸ்டிராங்காக இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காகவே வாசனை காக்கவைத்ததாகச் சொல்கிறார்கள். சந்திரகுமார் அணி பிரிந்தபிறகே வாசனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். ஆனால், சந்திரகுமார் அணி பிரிந்தாலும், நிர்வாகிகள் மட்டுமே சந்திரகுமார் அணியில் அவரைப் பின்தொடர்ந்து போகிறார்கள். தொண்டர்கள் விஜயகாந்த் பக்கமே இருக்கிறார்கள் என்று தற்போது, உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. அதேபோல, அதிமுக-வில் வேட்பாளர்களைத் தேர்வுசெய்த விஷயத்தில் ஜெயலலிதா என்ன செய்தார் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். அந்த ரகசியங்கள், ஒவ்வொன்றாக இப்போதுதான் கார்டனில் இருந்து கசிய ஆரம்பித்துள்ளது. சர்ச்சையில் சிக்கிய ஓபிஎஸ்., நத்தம் விஸ்வநாதன், கோகுலஇந்திரா, வளர்மதி, ராஜேந்திரபாலாஜி, செல்லூர் ராஜு,விஜயபாஸ்கர் ஆகிய 7 அமைச்சர்களுக்கு மீண்டும் சீட் கொடுக்கக்கூடாது என்பதுதான் முதலில் ஜெயலலிதா நினைத்தாராம். ஆனால், அவர்கள் சம்பாதித்த பணத்தை செலவு செய்யவைக்க வேண்டும் என்பதற்காகவே ஏழு பேரையும் மறுபடியும் ‘டிக்’ அடித்திருக்கிறார். அதேபோல நல்லதும் செய்யாமல், கெட்டதும் செய்யாமல் இருந்த சில எம்எல்ஏ-க்களும் தப்பிவிட்டார்கள். 40 வருடங்களுக்கு மேலாக அரசியலில் இருக்கும் அதாவது, எம்.ஜி.ஆர். காலத்து ஆட்களான பொன்னையன், ஜக்கையன், பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன், செம்மலை, தனபால் என எல்லோருக்கும் மீண்டும் சீட் கொடுத்துவிட்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் உடல்நிலை சரியில்லை என்றுதான் தேமுதிக-வில் இருந்தபோது, அவரது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனால் இடைத்தேர்தல் வந்தது. அரசுப் பணம் வீணானது. தற்போது, பண்ருட்டி ராமச்சந்திரன் உடல்நலம் சரியாகிவிட்டதா என்பது அதிமுக-வுக்கே வெளிச்சம்.
சசிகலா குடும்பத்திலிருந்து கொடுத்த லிஸ்ட்டில் உள்ளவர்களுக்கும் முடிந்தவரை வாய்ப்புக் கொடுத்துவிட்டார். சசிகலாவின் கணவர் நடராஜனின் தம்பி ராமச்சந்திரனிடன் உதவியாளராக இருந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு சீட் கேட்டு பரிந்துரை செய்தவர் ராமச்சந்திரன். பன்னீர்செல்வத்துக்கு கலசப்பாக்கம் தொகுதியில் சீட் கிடைத்துவிட்டது. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் முக்கியமான உதவிகளைச் செய்தவர் வழக்கறிஞரான நாமக்கல் செந்தில். அவர் சொன்ன ஆட்களுக்கும் சீட் கொடுத்திருக்கிறார். 33 சதவிகிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை கொடுக்கவேண்டும் என்பதால், விருப்பமனு அளித்திருந்த பெண்கள் எல்லோரையும் வரவழைத்துப் பேசியபோது, அவர்களில் பலருக்கும் தொகுதியைப் பற்றி எதுவுமே தெரியவில்லையாம். 70 தொகுதிக்கு பெண்களை நிறுத்தவேண்டும் என்ற ஜெயலலிதாவின் முடிவு அதன்பிறகுதான் மாறியிருக்கிறது. கடைசியில், தகுதியுடையவர்கள் என 32 பேரை செலக்ட் செய்திருக்கிறார்கள். இப்போது, அவர்களிலும் சிலர் சர்ச்சைகளில் சிக்கியவர்களாக இருக்கிறார்கள் என்று புகார் வர ஆரம்பித்துள்ளது. திமுக-வில் காங்கிரஸ்க்கு ஒதுக்கிய 41 தொகுதிகளில், 35 தொகுதிகள் ஈசியாக ஜெயித்துவிடலாம் என அதிமுக-வினர் உற்சாகமாக இருக்கிறார்கள்’’ என்ற ஸ்டேட்டஸ் போஸ்ட் ஆனது.
அதற்கு லைக்கை தட்டிவிட்டது வாட்ஸ் அப். அடுத்த செய்தியையும் டைப் செய்ய ஆரம்பித்தது.
‘‘திமுக-வின் தேர்தல் அறிக்கை நாளை வெளிவருகிறது. யாரும் எதிர்பார்க்காத பல சிறப்பம்சங்களுடன் அந்த அறிக்கை இருக்கும். மாவட்டம்தோறும் மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம்தோறும் உள்ள தேவைகள், பிரச்னைகள் அதைத் தீர்க்க வழிகள் என்று அனைத்தும் அதில் அடக்கம். மதுவிலக்கு பற்றிய அறிவிப்பும் வரப்போகிறது. டாஸ்மாக் மூலம் அரசுக்கு 26,188 கோடி ரூபாய் ஆண்டொன்றுக்கு
வருமானம் வருகிறது. இந்த வருமானத்தைச் சரிக்கட்ட என்ன வழி என்பதையும் அதில் சொல்லியிருக்கிறார்கள். டாஸ்மாக் ஊழியர்களுக்கு வேறு வேலைக்கான வழியும் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாமே புள்ளிவிபரங்களுடன் அதில் இருக்கும். விவசாயிகளுக்கு பல சந்தோஷமான செய்திகளும் உண்டு. குறிப்பாக, விவசாயத்துக்காக நகையை அடகுவைத்து வாங்கிய கடன்கள் எல்லாம் ரத்து செய்யப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்புக்காக என்ன செய்யப்படும், அதை எப்படி செயல்படுத்தப்போகிறோம் என்பதையும் புள்ளிவிபரங்களுடன் விளக்கியிருக்கிறார்களாம். கர்நாடகாவில் இருப்பதுபோல, லோக் ஆயுக்தா சட்டம் இங்கேயும் வரப்போகிறது. இதில், முதல்வர் தொடங்கி, யார் தவறு செய்தாலும் தண்டனை என்பது உறுதி. முதல்வரோ, அமைச்சரோ தன்னிச்சையாக யாரும், எந்த முடிவும் எடுக்கமுடியாது. அதேநேரத்தில், தவறுசெய்தாலும் தப்ப முடியாது. ஆக, திமுக-வைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலின் கதாநாயகனாக இருக்கப்போவது தேர்தல் அறிக்கைதான். அதனால்தான், அது வெளியில் கசிந்துவிடக்கூடாது என்று சீக்ரெட் ஆக வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவே திமுக-வின் தேர்தல் அறிக்கையைத்தான் ஆர்வமாக எதிர்பார்த்திருக்கிறாராம்’’ என்று சொல்லிவிட்டு, ஆஃப் லைனுக்குப் போனது.,”









