ஒரே நாளில் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அதிமுக தலைவர் ஜெயலலிதா சில தலைவர்களைச் சந்திக்கிறார் என்றதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தங்களுக்கு அழைப்பு வருமா வராதா என ஏங்கிக் கொண்டிருந்த சிலரும் இதில் அடக்கம்.இன்று மதியம் 3 மணிக்கு ஒவ்வொரு தலைவர்களையும் ஜெயலலிதா தேர்தல் கூட்டணி குறித்து தனித் தனியாக அழைத்துப் பேசியதில் அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி.அவரைச் சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய தலைவர்கள்
#
இந்தியக் குடியரசுக் கட்சி – செ.கு.தமிழரசன்
வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் அதிமுக-வை ஆதரிக்கிறோம். அதிமுக வெற்றிபெற எங்களை முழுமையாக அர்ப்பணித்து வேலை பார்ப்போம். தொகுதிப் பங்கீடுகள் குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும்.
#
தமிழக வாழ்வுரிமைக் கட்சி – வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக-வை ஆதரிக்கும். எங்களுக்கு வலுவான ஆதரவுள்ள வட, தென் மாவட்டங்களில் தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டுள்ளோம். இந்தமுறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கிடைக்கும் என நம்புகிறோம்.
#
தவ்ஹீத் ஜமாத் கட்சி – எஸ்.எம்.பாக்கர்
அதிமுகவை இந்த தேர்தலில் ஆதரிக்கிறோம். அது பற்றிய எங்கள் முடிவை செயற்குழுவைக் கூட்டி முடிவு செய்து அறிவிப்போம்.
#
பார்வர்டு பிளாக் கட்சி – கதிரவன்
அம்மாவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.அதிமுக-வுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கிறோம். இந்தமுறை கூடுதல் தொகுதிகள் கேட்கப்படும்.
#
சமத்துவ மக்கள் கழகம் – எர்ணாவூர் நாராயணன்
இந்தத் தேர்தலில் சரத்குமார் எந்தத் தொகுதியில் நிற்கிறாரோ, அங்கு அவரைத் தோற்கடிக்கும்வகையில் பிரச்சாரம் செய்யப்படும். தொகுதிப் பங்கீடுகள் குறித்து இன்று நாங்கள் பேசவில்லை.
#
கொங்கு இளைஞர் பேரவை – தனியரசு
அதிமுக-வுக்கு எங்கள் ஆதரவு தொடரும். தொகுதிப் பங்கீட்டில் இடம் கொடுக்கவில்லை என்றாலும் எங்கள் ஆதரவு தொடரும்.
#
தமிழ் மாநில முஸ்லீம் லீக் – ஷேக் தாவூத்
இந்தமுறை கூட்டணியில் 5 இடங்கள் ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். கூட்டணிக்கு ஆதரவு தொடரும்.
இந்தக் கட்சிகளை பெரிய கட்சிகள் என்று சொல்ல முடியாது ஒவ்வொரு மண்டலத்திலும் ஓரளவு செல்வாக்குள்ள கட்சிகள்தான் என்றாலும் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.









