மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் தூக்கி வீசிய பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள செருபுழா என்ற ஊர் நீலம்பூர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. நீலம்பூர் வனப்பகுதியில் யானைகள் காப்பகமும் அமைந்திருக்கிறது.
இந்நிலையில் நேற்று (அக்டோபர் 12) இரவு காட்டு யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி செருபுழா பகுதிக்குள் நுழைந்தது. இரவு நேரம் என்றாலும் சாலையில் மனிதர்கள் நடமாட்டமும் இருந்தது.
அந்த யானை சாலையிலிருந்த மனிதர்களைத் தாக்குவதற்காக வேகமாக ஓடி வந்ததைக் கண்ட மக்கள் அச்சத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்து தப்பி ஓடினர்.
ஆனால் யானை ஓடிவந்த வேகத்தில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தைத் தனது தும்பிக்கையால் வேகமாக தூக்கி வீசியது.
பிறகு அதே சாலையில் காட்டு யானை நடந்து சென்றது. இது தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது குறித்து உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதி மக்களின் உதவியுடன் யானையை மீண்டும் காட்டிற்குள் விரட்டிவிட்டனர்.
நல்வாய்ப்பாக நேற்று நடைபெற்ற யானை தாக்குதலால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. .
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
