நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த யானைக்குட்டிக்கு வனத்துறையினர் குடைபிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த சில வாரங்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குடியிருப்பு பகுதிகள் மட்டுமல்லாது வனப்பகுதிகளும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைக்குட்டி ஒன்று தனது தாய் யானையைப் பிரிந்து தனியாக வெள்ளத்தில் அடித்துவரப்பட்டது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் யானைக்குட்டியை பத்திரமாக மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து யானைக்குட்டியை அதன் தாயுடன் சேர்த்து வைப்பதற்காக வனத்துறையினர் 8 குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டனர். இறுதியாக யானைக்கூட்டத்தைக் கண்டுபிடித்து யானைக்குட்டியை அதன் தாயுடன் சேர்த்து வைத்தனர்.
இதற்கிடையில், தாய் யானையைத் தேடும் சமயத்தில் ஒருநாள் யானைக்குட்டி வெயிலில் படுத்துத் தூங்கியது.
இதனால் யானைக்குட்டிக்கு வெயில் படாமலிருக்க வனத்துறை அதிகாரி ஒருவர் வெயிலில் நின்று கொண்டு குடைபிடித்தார். இதனை உடனிருந்த மற்றொரு அதிகாரி வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோவை தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் செயலாளர் சுப்ரியா சாகு, தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்து தமிழ்நாடு வனத்துறையினருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் அதில், “தாய் யானையுடன் குட்டியை இணைக்கும் முயற்சியின்போது தூங்கிக்கொண்டிருக்கும் யானைக்குட்டிக்கு தமிழக வனத்துறையினர் குடைபிடித்து நிற்கும் காட்சியை நீங்கள் பார்க்க முடியும்.
அவர்களின் கருணை, அக்கறை மற்றும் சிந்தனை முழு முயற்சியையும் பயனுள்ளதாக்கியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி தமிழக வனத்துறையினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மோனிஷா