இந்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
நடப்பாண்டிற்கான டி20 உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்கும் இந்திய அணி அக்டோபர் 23 ஆம் தேதி நேரடியாக சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட உள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்களைச் செப்டம்பர் 12 ஆம் தேதி பிசிசிஐ அறிவித்தது.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் இடம்பெற்றார்.

இவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் விளையாடினார். அதில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்.
ஆனால், டி20 தொடர் கடைசி போட்டியின் போது தீபக் சாஹருக்கு முதுகில் காயம் ஏற்பட்டதன் காரணமாக இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் விளையாடாமல் ஓய்வு எடுத்துக் கொண்டார்.
தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் ஒரு நாள் போட்டியில் களமிறங்கினார்.
காயம் சரியான பிறகு அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியிடையேயான டி20 உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் தீபக் சாஹர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தீபக் சாஹர் உலகக்கோப்பை தொடரிலிருந்தும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபக் சாஹருக்கு பதிலாக இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு மிகக் பெரிய பின்னடைவாக கருதப்பட்டது.
பும்ராவிற்கு பதிலாக முகமது ஷமி இந்திய அணியில் விளையாடுவதற்கு, தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்காக வரும் அக்டோபர் 13 ஆம் தேதி முகமது சிராஜ், முகமது ஷாமி, ஷர்துல் தாக்கூர் ஆகிய மூவரும் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
டி20 உலகக் கோப்பையிலிருந்து பும்ரா விலகலைத் தொடர்ந்து தீபக் சாஹரின் விலகல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
மூன்று வேடங்களில் நடிக்கும் டொவினோ தாமஸ்
’நீங்கள் ஒரு தேவதை’ : ஆட்சியருக்கு ஐஸ் வைத்து லீவ் கேட்ட மாணவர்கள்!