பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன் என்று மத்திய அரசு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடல், நிதிஉதவி அளித்தல், பயிற்சி மற்றும் ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அதன்பேரில் கடந்த சில நாட்களாக என்ஐஏ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை நாடு முழுவதும் பிஎப்ஐ அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த 22ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தியது.
தமிழகம், கேரளா உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை நடந்தது. அதில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் கல்வீச்சு, குண்டுவீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
தொடர்ந்த சோதனைகள், கைதுகள்!
இதனை தொடர்ந்து, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் நேற்று 2-வது முறையாக சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன. மொத்தம் 247 பி.எப்.ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

பிஎப்ஐக்கு தடை விதித்த மத்திய அரசு!
இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்து மத்திய அரசு இன்று தடை உத்தரவு பிறப்பித்தது.
மேலும் இந்த அமைப்பு இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் விளக்க அறிக்கை!
பிஎப்ஐ அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டது ஏன் என்று மத்திய அரசு நீண்ட விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், “கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற துணை அமைப்புகளை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உருவாக்கி உள்ளதாக மத்திய குற்றம்சாட்டி உள்ளது.
இப்படி பல துணை அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் மாணவர்கள், பெண்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என்று பலரை சந்தித்து அவர்களை தங்கள் குழுவிற்குள் இணைத்து உள்ளனர்.
நிறைய குழுக்களை இந்த அமைப்புகள் மூலம் உருவாக்கி அதன்மூலம் சட்டத்திற்கு விரோதமான செயல்கள், கூட்டங்கள், திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர் .
மேலும் அதிக அளவில் நிதி திரட்ட இந்த அமைப்புகளையெல்லாம் பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சட்டத்துக்கு புறம்பான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு அமைதியை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால் தடை செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வெளிப்படையாக சமூக சேவை அமைப்பு போல செயல்பட்டாலும், உள்ளே அவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களை செய்து வருகிறார்கள்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். நாட்டின் அமைதிக்கு கேடு விளைவிக்கிறார்கள்.
இந்த அமைப்பை நிறுவியவர்கள்,மாணவர் இஸ்லாமிய இயக்கம் ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் மாதிரியான ஏற்கனவே தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தலைவர்களாக இருந்துள்ளனர்.
சர்வதேச அளவில் உள்ள ஐஎஸ்எஸ் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் பிஎப்ஐக்கு தொடர்பு இருக்கிறது.
அமைப்பில் உள்ள சிலர் சர்வதேச அளவில் தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்தும் உள்ளனர்.
இவர்கள் நாட்டின் அமைதியை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த அமைப்பின் வருமானம் மீது சந்தேகங்கள் இருந்தாலும், வருமான வரித்துறை பதிவும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு கொலைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுமட்டுமில்லாமல் கர்நாடகா, உத்தரப் பிரதேசம், குஜராத் மாநில அரசுகள் பிஎப்ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்பதால் இந்த அமைப்புக்கு தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
மேலும், அதன் துணை அமைப்புகளான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், என்.சி.எச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்புக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கிறோம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை!
உட்கட்சி தேர்தல்: திமுக தலைமைக்கு எதிரான வழக்கு – விசாரணை எப்போது?

Comments are closed.