பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தினுள் நுழைய போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
அதுபோன்று கோவையில் உள்ள அலுவலகத்துக்குள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தல், பயிற்சி, ஆள் சேர்ப்பது போன்றவற்றில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக உளவுத் துறை தகவல் தெரிவித்தது.
அதனடிப்படையில் 15 மாநிலங்களில் 95 இடங்களில் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 22ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். இதில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை இயக்குநர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய உள்துறைச் செயலாளர், உள்ளிட்டோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடைவிதிப்பது தொடர்பாக பேசப்பட்டது.
தொடர்ந்து, நேற்றும் 8 மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக தலைமை அலுவலகத்தின் உள்ளே செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
அலுவலகம் உள்ளே யாரும் செல்லாத வகையில், போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர். ஒரு உதவி ஆணையர் தலைமையில் மூக்காத்தாள் தெருவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக சென்னை முழுவதும் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து துணை ஆணையர்களும் உஷார் நிலையில் இருக்கும்படி காவல் ஆணையர் சங்கர் ஜுவால் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
அதுபோன்று கோவை உக்கடம் பகுதியில் உள்ள எஸ்டிபிஐ – பிஎஃப்ஐ அலுவலகங்கள் முன்பு பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
உக்கடம் பேருந்து நிலையம் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.

இந்நிலையில் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடந்த அந்த அமைப்பைச் சேர்ந்த பெண்கள் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக குவிந்தனர்.
அப்போது அங்கிருந்து செல்லுமாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூறியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
“எங்களுடைய கருத்தை மீடியாக்களிடம் சொல்ல வந்தோம். அதற்குக் கூட அனுமதி மறுப்பது எவ்விதத்தில் நியாயம். ஒவ்வொரு வீடாக வந்து எங்களை செத்துவிடுங்கள் என்று சொல்வீர்கள். அதையும் நாங்கள் கேட்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினர்.
கலை.ரா
உட்கட்சி தேர்தல்: திமுக தலைமைக்கு எதிரான வழக்கு – விசாரணை எப்போது?
இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை?: அதிர்ச்சி தகவல்!