திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக தலைமைக்கு எதிராக நீதிமன்றத்தில் தென்காசியைச் சேர்ந்த மா.செவின் ஆதரவாளர் தொடுத்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.
திமுகவில் அமைப்பு ரீதியிலான 15 வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22 முதல் 25ம் தேதி வரை நடைபெற்றது.
இதனையடுத்து வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான செப்டம்பர் 22 ஆம் தேதியன்று தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாதனும், தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லதுரையும் மனு தாக்கல் செய்தனர்.
அவருடன் செங்கோட்டை முன்னாள் ஒன்றியச் செயலாளர் ரவிசங்கர் உள்ளிட்ட வேறு சிலரும் மனு தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே தென்காசி எம்பியும் விருதுநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான தனுஷ்குமாரிடம் இருந்து மாசெ பதவிக்கான விருப்ப மனுவை கட்சி தலைமை கேட்டுப் பெற்றுள்ளது.
சிக்கலில் செல்லதுரை… கைவிரித்த நேரு!
இதில், சிவபத்மநாதன் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு மனுத்தாக்கல் செய்துள்ள செல்லதுரைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேச அமைச்சரும், கழக முதன்மை செயலாளருமான நேருவை சந்தித்தார் செல்லதுரை. ஆனால், தன்னால் எதுவும் செய்ய முடியாது என அவர் கை விரித்துவிட்டார்.
இதனை தொடர்ந்து தான் கடந்த செப்டம்பர் 25ம் தேதி அறிவாலயத்தில் குவிந்த செல்லதுரையின் ஆதரவாளர்கள், வெளிப்படையாக தேர்தல் நடத்தி மாசெவை அறிவிக்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சியினர் அளித்த மனுக்கள் மீதான பரிசீலனை 26ம் தேதி தொடங்கியது. அப்போது தென்காசி எம்பியான தனுஷ்குமாருக்கு தான் வாய்ப்பு அதிகம் என்று தெரியவந்தது.

திமுக உட்கட்சி பூசல் – நீதிமன்றத்தில் வழக்கு!
இதனையடுத்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரையின் ஆதரவாளரான விஜய அமுதா என்பவர் தென்காசி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுக கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு எதிராக சிவில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார்.
அதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருக்கான உட்கட்சி தேர்தலை சென்னையில் நடத்தாமல் தென்காசியில் நடத்த வேண்டும் என கோரிக்கையுடன் கடந்த 26ம் தேதி வழக்கறிஞர் இசக்கி துரை என்பவர் மூலமாக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், அடுத்தமாதம் 10ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது.
ஏற்கெனவே எதிர்கட்சியான அதிமுகவில் நிலவி வரும் தலைமை போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தற்போது உட்கட்சி பூசலால் திமுக தரப்பிலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
சுயநல அரசியல் லாபத்தை நோக்கி மட்டுமே சிந்திக்கும் மோடி அரசு: கே.பாலகிருஷ்ணன்
உதயநிதி படத்துக்கு அவசரம் காட்டும் கமல்