விஜய் அரசின் முதல் சட்டசபை கூட்டத் தொடர்: இன்று ஆளுநர் உரை! விவாதமாகுமா ‘வந்தே மாதரம்’ சர்ச்சை?

Published On:

| By Mathi

Tamil Nadu Assembly Session Begins

முதல்வர் விஜய் (Vijay) தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் (First Assembly Session) இன்று ஜூன் 18-ந் தேதி, ஆளுநர் அர்லேகர் உரையுடன் தொடங்குகிறது.

தமிழக முதல்வராக ஜோசப் விஜய் கடந்த மே 10-ந் தேதி பதவியேற்றார். இதனையடுத்து மே 11-ந் தேதி தமிழக சட்டசபை கூடியது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவியேற்றனர். இதன் பின்னர் மே 13-ந் தேதி முதல்வர் விஜய் அரசு மீது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்ததால் முதல்வர் விஜய் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. இதன் பின்னர் சட்டசபை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் முதல்வர் விஜய் ஆட்சியின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் முறைப்படி ஆளுநர் அர்லேகர் உரையாற்றுகிறார். இதற்காக ஆளுநர் அர்லேகருக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து இன்று காலை 9.50 மணிக்கு சட்டசபைக்கு வரும் ஆளுநர் அர்லேகருக்கு மரபான வரவேற்பளிக்கப்படும். அப்போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் சட்டசபை செயலாளர் உள்ளிட்டோர் ஆளுநர் அர்லேகரை வரவேற்பர்.

ADVERTISEMENT

பின்னர் சட்டசபையில் இன்று உரையாற்றும் ஆளுநர் அர்லேகர், புதிய அரசின் திட்டங்கள் உள்ளிட்டவற்றை அறிவிக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. ஆளுநர் அர்லேகர் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். இதன் பின்னர் ஆளுநர் உரையை சபாநாயகர் தமிழில் வாசிப்பார்.

ஆளுநர் உரை நிறைவடைந்த பின்னர், பிற்பகலில் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூடி இந்த கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்யும். சட்டசபை கூட்டத் தொடர் 3 நாட்கள் நடைபெறக் கூடும்.

ADVERTISEMENT

சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுவில்

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன், நிர்மல் குமார், ராஜேஷ் குமார், வன்னி அரசு மற்றும் அரசு கொறடா சபரிநாதன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக கொறடா எ.வ.வேலு, சிவசங்கர், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.எஸ். மணியன், பாமகவின் சௌமியா அன்புமணி, ஆர். செல்லசுவாமி, இராமச்சந்திரன், சையது பாரூக் பாஷா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.

வந்தே மாதரம் சர்ச்சையாகுமா?

தமிழகத்தில் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவியேற்றது முதல், அவர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்படுகிறது; இதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் 3-வதாக தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்படுகிறது. இது மிகப் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் சட்டசபையில் தேசிய கீதம் முதலில் பாடப்படவில்லை என்பதற்காக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, தொடர்ந்து “வெளிநடப்பு” செய்தது பெரும் சர்ச்சையானது. தற்போது ’வந்தே மாதரம்’ பாடலுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் 3-வதாக இசைக்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் வியூகம்

சட்டசபையில் திமுக 59; அதிமுக 42 என எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், மின்வெட்டு உள்ளிட்டவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பக் கூடும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.

சட்டசபை கூட்டத் தொடர் நிகழ்ச்சிகள் அனைத்தும் கடந்த காலங்களைப் போலவே நேரலையாக ஒளிபரப்பப்படும். சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் சென்னை கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுளன.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share