தவெக அரசு குதிரைப் பந்தயத்தில் ஈடுபடுவதல்ல, குதிரை வேகத்தில் செயல்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் பேசுகையில், “சி. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராகக் கொண்ட அமைச்சரவை மீது இப்பேரவை தனது நம்பிக்கையைத் தெரிவிக்கிறது என்று நான் முன்மொழிந்த அரசினர் தீர்மானத்தின் மீது, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து, தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் உரையாற்றியுள்ளனர். உரையாற்றிய அனைத்து உறுப்பினர்களுக்கும் முதற்கண் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக உரையாற்றிய ராஜேஷ் குமார் தீர்மானத்தை வரவேற்றதோடு, மதச்சார்பற்ற அரசுக்கான ஆதரவைத் தெரிவித்தார். நிச்சயமாக இந்த அரசு மதச்சார்பற்ற அரசாகவே செயல்படும் என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உரையாற்றிய ஆர். செல்லசுவாமி இந்தத் தீர்மானத்தை வரவேற்று முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக உரையாற்றிய மாண்புமிகு உறுப்பினர் வன்னி அரசு அவர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று இந்த அரசு ஐந்து ஆண்டுகள் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தமைக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். “ஆதரிப்பவர்களுக்கு மட்டுமான அரசல்ல, எதிர்ப்பவர்களுக்குமான அரசு இது” என்று சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி.
முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்ற உறுதியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக உரையாற்றிய ஷாஜகான் அவர்கள் தீர்மானத்தை வரவேற்று, இந்த அரசு வரலாற்றுச் சாதனை படைக்கும் என்று வாழ்த்தியுள்ளார்.
உறுப்பினர் எஸ். காமராஜ் அவர்கள் தீர்மானத்தை வரவேற்று உரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உரையாற்றிய ராமச்சந்திரன் அவர்கள் தீர்மானத்தை வரவேற்றுப் பேசியுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக உரையாற்றிய மாண்புமிகு உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், எதிர்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக நினைக்காமல் எங்கள் அரசு செயல்படுவது குறித்து குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தமைக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இரண்டொரு கருத்துக்களைத் தெரிவித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். I will rethink about it.
தமிழ்நாட்டை ஆண்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த அரசுகள் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி தீட்டிய திட்டங்கள், சமூக நீதிக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த சட்டங்கள், எங்கள் கட்சியின் கொள்கைத் தலைவர்களின் எண்ணங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு எங்கள் ஆட்சி நடைபெறும் என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சி சார்பாகப் பேசிய எம். போஜராஜன் நடுநிலை வகிப்பதாகத் தெரிவித்து உரையாற்றினார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக உரையாற்றிய சௌமியா அன்புமணி அவர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மகளிர் நலன், மது ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைச் சுட்டிக்காட்டி, தீர்மானத்திலிருந்து விலகி நிற்பதாகத் தெரிவித்துள்ளார். மகளிர் பாதுகாப்பில் இந்த அரசும் இம்மியளவும் தவறு செய்ய இடம் தராது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து உரையாற்றிய தமிமுன் அன்சாரி, நித்தியானந்தன், எம்.ஹெச். ஜவாஹிருல்லா, எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தீர்மானத்தை எதிர்த்து உரையாற்றினர். எதிர்க்கட்சித் தலைவர் வெளிநடப்பு செய்துவிட்டார்.
எஸ். பி. வேலுமணி தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றினார். “குதிரைப் பேரத்தில் எங்கள் அரசு ஈடுபடுகிறது” என்று குறிப்பிட்ட உறுப்பினருக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரைப் பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல என்பதை ஆணைத்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைவர்களின் வழிகாட்டிய கொள்கைகளிலிருந்து இம்மியளவும் விலகாமல் இந்த ஆட்சி நிச்சயமாக நடைபெறும். எனவே, நான் முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்” என்றார்.
