மேகதாது அணை பிரச்சனையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க கோரி தமிழக அரசு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த திருத்தத்துடன் தீர்மானத்தை நிறைவேற்றியதற்கு சிபிஐ (CPI) மற்றும் பாமக (PMK) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சட்டசபையில் இன்று பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பேசியதாவது: எதிர்க்கட்சி உறுப்பினர் எ.வ.வேலு பேசும்போது, ‘அன்றைய தினமே அவை நடவடிக்கைகள் முடிந்துவிட்டன, நீங்கள் அன்றே சொல்லியிருக்க வேண்டியதுதானே’ என்று கேட்டார். நாங்கள் அந்த விவாதத்திற்குள் கூட செல்ல விரும்பவில்லை.
எங்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்து என்னவென்றால், அன்றைக்கு அவையில் அந்தத் தீர்மானம் வரும்போது, ஏற்கனவே இருக்கும் ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை’ (Cauvery Water Management Authority) ஒரு தன்னாட்சி அமைப்பாக (Autonomous body) மாற்றலாம் என்றுதான் நாங்கள் கருதினோம்.
அது அப்படி இல்லாமல், மேகதாது பிரச்சனைக்கு தனி நடுவர் மன்றம் அமைக்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த திருத்தத்தை, தமிழகத்தின் ஜீவாதாரத்திற்கு எதிரானதாகவே நாங்கள் பார்க்கிறோம்.
ஏனென்றால், சட்டத்தின் மூலமாக ஏற்கனவே தீர்ப்பு வந்து, பல தீர்ப்புகளின் அடிப்படையில் இன்றைக்கு காவிரி ஆணையம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த ஆணையத்தில் கிடைக்க வேண்டிய உரிமையே நமக்கு இன்றுவரை முழுமையாகக் கிடைக்கவில்லை.
இப்பொழுது, நமது சட்டமன்றத்தின் மூலமாகப் புதிய நடுவர் மன்றம் அமைக்கலாம் என்று சொல்லிவிட்டால், அது கர்நாடகத்திற்குச் சாதகமாக அமைந்து, நமக்குச் சட்ட ரீதியான சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எந்தவித சமரசமும் செய்துகொள்ளக்கூடாது என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு. அப்படி சமரசத்திற்கான வழிவகை, இந்த புதிய நடுவர் மன்ற கோரிக்கை மூலமாக ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயம் எங்கள் கட்சிக்கு உள்ளது. அதனால்தான், எங்கள் தலைவரின் அறிவுறுத்தலின்படி, இந்த ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மேகதாதுவைப் பொறுத்தவரை, எந்த சமரசமும் தமிழக அரசு செய்துகொள்ளக்கூடாது. கீழ்பாசன மாநிலங்களின் (Lower Riparian States) அனுமதி இல்லாமல், மேல்பாசன மாநிலங்கள் (Upper Riparian States) அங்கு கட்டுமானப் பணிகளை செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் ஆணை தெளிவாக உள்ளது. எந்த ஒரு காரணத்தினாலும் அங்கு கட்டடப் பணி நடப்பதற்கான அனுமதி இல்லை என்று அமைச்சரே தெளிவாகச் சொல்லிவிட்டார். ‘அமைச்சர் சொன்னது எந்தப் பாதிப்பும் வராது’ என்று கூறியிருக்கிறார், அதில்தான் எங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ளது. நிச்சயமாக இந்த நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால், தமிழ்நாட்டிற்குச் சட்ட ரீதியான பாதிப்புகள் ஏற்படும். மேகதாது என்ற ஒரு புதிய பிரச்சினை எழும்; அந்தப் பிரச்சினை எழுவதற்கே தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்பதை இந்த அவையில் பதிவு செய்கிறேன். இந்த ஆணையம் அமைப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தனது 100 சதவீத எதிர்ப்பைப் பதிவு செய்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிபிஐ (CPI) கடும் எதிர்ப்பு
சிபிஐ எம்.எல்.ஏ. தளி ராமச்சந்திரன் பேசியதாவது: தமிழ்நாட்டினுடைய ஜீவாதாரமான காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை, கொள்கை ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் இந்த அவையில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், தமிழ்நாட்டினுடைய வாழ்வாதார உரிமை என்ற அடிப்படையிலே அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தார்கள்.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, ‘புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும்’ என்ற ஒரு திருத்தத்தை முன்மொழிந்தார். அந்தத் திருத்தத்தோடு மாண்புமிகு முதலமைச்சர் தீர்மானத்தை நிறைவேற்றினீர்கள்.
நான் கையைத் தூக்கினேன், ஆனால் நீங்கள் வேறொரு அலுவலுக்குள் போய்விட்டீர்கள். நான் உங்களுடைய அறைக்கும் வந்தேன், ஆனால் முதலமைச்சர் வந்திருந்ததால் நீங்கள் என்னைப் பேச அனுமதிக்கவில்லை.
ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தால், அந்தத் திருத்தத்தை சட்டமன்றத்தில் பேரவைத் தலைவர் மற்ற உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். என்ன திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்று சொல்லி, அதன் மீது விவாதிக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். அவ்வாறு விவாதிக்க அனுமதி அளிக்காமல், நீங்கள் ஏகமனதாக அந்தத் தீர்மானத்தை அங்கீகரித்துவிட்டீர்கள்.
ஆகவே, நாங்கள் சொல்வது என்னவென்றால், இந்த புதிய திருத்தம் தேவையில்லை. ஏனென்றால், ஏற்கனவே 1990-ல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலமாகத்தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதேபோல, 2007-ல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில், கடலோர மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவின் எந்தவித அனுமதியும் இல்லாமல், முதல்முறை மாநிலம் (கர்நாடகா) எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று சொல்லப்பட்டது; அதைத்தான் 2018-ல் உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாகக் கூறியிருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழுவும் ஒரு வருடத்திற்குத் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 177.25 டி.எம்.சி தண்ணீரை, ஜூன் முதல் மே மாதம் வரை மாதம்தோறும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அவ்வாறு ஏற்கனவே தீர்ப்பு தெளிவாக இருக்கும்போது, புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை அமைத்தால், அது தமிழ்நாட்டிற்குப் பாதகமாக அமைந்துவிடும். நாமே நம்முடைய காலில் சுடுதண்ணீரை ஊற்றிக்கொண்டது போல ஆகிவிடும்.
ஆகவே, புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கூடாது என்பது எங்களுடைய கட்சியின் நிலைப்பாடு. எனவே, அந்தப் புதிய நடுவர் மன்றத் திருத்தம் இல்லாமல், முதலமைச்சர் முதலில் கொண்டு வந்த தீர்மானத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
