முதல்வர் விஜய்யின் ’பெருந்தன்மை’.. சட்டசபையில் திமுக பாராட்டு!

Published On:

| By Mathi

CM Vijay’s Magnanimity Wins Praise from DMK

தமிழக சட்டசபையில் மேகதாது அணை பிரச்சனையில், புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் திருத்தத்தை ஏற்று தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய்க்கு திமுக சார்பில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பதாக திமுகவின் கொறடா எ.வ.வேலு தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று ஜூன் 22-ந் தேதி திமுக கொறடா எ.வ.வேலு பேசியதாவது: சட்டசபையில் ஒரு திருத்தம் கொடுக்கிற பொழுது, அதில் ஏதாவது பிரச்சனை இருக்கும் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் எழுந்து, ”அந்த திருத்தம் எங்களுக்கு ஏற்புடையது அல்ல, அந்த திருத்தத்தில் இப்படி மாற்றம் செய்ய வேண்டும்” என்று கருத்து சொல்வதற்கு முழு உரிமை உண்டு. அன்றைய தேதியில் அத்துடன் அந்த பிரச்சனை முடிந்துவிட்டது.

ADVERTISEMENT

பேரவை உறுப்பினர்கள் இன்னொன்றையும் கேட்கலாம்.. “நீங்கள் திருத்தம் கொடுத்தீர்களே, முதலமைச்சர் அவர்கள் அந்த திருத்தத்தை ஏற்றுக்கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றுகிறார், அதை எங்களுக்கு விளக்கமாகச் சொல்லுங்கள்” என்று கூட கேட்கலாம். அப்படியும் யாரும் கேட்கவில்லை.

கர்நாடகாவில் வீரேந்திர பாட்டீல் முதலமைச்சராக இருந்த பொழுது, தமிழகத்தில் அண்ணா அப்போது முதலமைச்சர்; பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர் கலைஞர். அன்று முதல் இந்த காவிரி பிரச்சனை இருந்து வருகிறது. அப்போது முதல் பல்வேறு வகையில, பல சட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதற்குப் பின்னால் உயர்நீதிமன்றத்திற்குப் போய், உச்சநீதிமன்றத்திற்குப் போய், டிரிபியூனல் (நடுவர் மன்றம்) வந்தது. இப்போது அத்தாரிட்டி- ஆணையம் இருக்கிறது. இதற்கும் பல்வேறு வகையிலே சட்டப் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இது முழுமையாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தெரியும்.

ADVERTISEMENT

ஆனால் புதியதாக பொறுப்பேற்று இருக்கிற அரசாங்கம் இதிலே வெற்றி பெற வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள், எனவே நாமும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

ஏனெனில் இது தமிழக விவசாயிகளுடைய பிரச்சனை, காவிரி டெல்டா பகுதி பிரச்சனை. இதிலே அரசியலே கூடாது, இதிலே முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்ற உணர்வோடு தான் செயல்படுகிறோம்.

ADVERTISEMENT

மேகதாது அணை தொடர்பான தீர்மானம் வருகிறது என்ற உடனேயே எங்களுடைய தலைவர் ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர் வில்சனை அழைத்து டெல்லியில் உள்ள வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்த சொன்னார். அதன்படி இரவோடு இரவாக வழக்கறிஞரிடம் பேசியதில், ”புதிய நடுவர் மன்றம் அமைக்கலாம்” என சட்டசபை தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வந்தால் தான் மேகதாது அணையை கட்டுவதை நிறுத்த முடியும் என்ற யோசனை தெரிவித்தனர்.

இதனடிப்படையில்தான் அரசினர் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஒரு திருத்தத்தை கொண்டு வந்தார்.

முதலமைச்சர் அவர்களும் அதைப் படித்துப் பார்த்துப் பெருந்தன்மையோடு இந்த திருத்தத்தையும் இணைத்து தீர்மானம் நிறைவேற்றினார்.

அனைவரும் ”ஒன்றாகப் போராடுவோம்” என்ற நிலையில் தான் அந்த தீர்மானத்தை முதல்வர் விஜய் நிறைவேற்றி இருக்கிறார். அதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அவருக்கு எங்களுடைய பாராட்டுதலையும், நன்றியையும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறோம். இதில்
மாற்றுக் கருத்து இல்லை.

அம்மோனியா கசிவால் உயிர் பலி

அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கலாம் என்று எங்கள் தலைவர் ஸ்டாலின் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

சில நேரங்களிலே நாம் எதிர்பாராத விபத்துக்கள் நடைபெற்றுவிடும், அப்போது அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும். அது கவன ஈர்ப்புத் தீர்மானம். நான் உங்ககிட்ட கொடுத்தது கூட கவன ஈர்ப்புத் தீர்மானம் தான். அந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அனுமதித்தால் நாங்கள் விரிவாக பேசியிருப்போம். நான் மீண்டும் சொல்லுகிறேன் குற்றச்சாட்டு அல்ல; அரசாங்க கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

முதல்வர் விஜய்க்கு ( CM VIJAY) திமுக பிறந்த நாள் வாழ்த்து

எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேர் சார்பாகவும் மாண்புமிகு முதலமைச்சருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் (அப்போது திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வாழ்த்து தெரிவித்தனர்). இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share