தமிழ்நாடு அமைச்சரவை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.
தவெக சார்பில் எழும்பூர் தனித்தொகுதியில் போட்டியிட்ட ராஜ்மோகன் கடந்த மே 10ஆம் தேதி அமைச்சராகப் பதவியேற்றார். அவருக்குத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனித்தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பேரவைத் தலைவரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன் இன்று அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
மேலும், அவிநாசி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனைத் தோற்கடித்த எம்எல்ஏ கமலி, ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியில் போட்டியிட்டு வென்ற மதன்ராஜா, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையைத் தோற்கடித்த தென்னரசு ஆகியோர் இன்று பதவியேற்றனர்.
அதேபோல் அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெற்ற காந்தி ராஜ் மற்றும் காங்கிரஸ் சார்பில் மேலூர் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஸ்வநாதனும் அமைச்சராகப் பதவியேற்றனர்.
தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சியமைத்துள்ள விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 7 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இடம்பெற்றிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் அமைச்சரவையில் முதல் பட்டியலின அமைச்சராக பி.கக்கன் பதவியேற்றார். திமுகவில் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி அமைச்சரவையில் சத்தியவாணி முத்து இடம்பெற்றார்.
கடந்த திமுக ஆட்சியில் மதிவேந்தன், கோவி. செழியன், சி.வி.கணேசன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
