தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளதாக ஏபிவிபி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் விஜய்யை நேற்று நேரில் சந்தித்து, கல்வித் துறை சார்ந்த 17 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இச்சந்திப்பின் போது, 17 கோரிக்கைகளில் 8 கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக ஏபிவிபி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சந்திப்பு குறித்து ஏபிவிபி நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” நான் முதல்வன்’ திட்டத்தில் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத சில விஷயங்கள் உள்ளதாக முதலமைச்சரிடம் முறையிடப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நிரப்பப்பட வேண்டிய சுமார் 4,000 காலியிடங்கள் குறித்தும், செட் (SET) தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,000 கோடி மத்திய அரசு நிதி மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம்
மத்திய அரசின் ‘பிஎம் ஸ்ரீ’ (PM SHRI) திட்டம் குறித்து இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மாநில அரசு இன்னும் கையெழுத்திடாத காரணத்தால், மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய சுமார் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கல்வி நிதி வராத சூழல் நிலவுகிறது. இதுகுறித்தும் முதல்வரிடம் எடுத்துரைத்தோம் “நடைமுறை சாத்தியக்கூறுகளை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர் கல்வியில் நிலவும் பேராசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் துணைவேந்தர்கள் இல்லாத சூழல் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கை
தேசிய கல்விக் கொள்கையில் (NEP) மும்மொழிக் கொள்கை கட்டாயத் திணிப்பாகச் சொல்லப்படவில்லை. மாணவர்கள் அனைவரும் தாய்மொழியை கண்டிப்பாகப் படிக்க வேண்டும்; இரண்டாவது மொழி ஆங்கிலமாகவோ அல்லது பிற உள்நாட்டு மொழியாகவோ இருக்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது.
இங்குள்ள திராவிடக் கட்சிகள், இந்தத் திட்டம் இந்தியைத் திணிக்கப் பார்ப்பதாகக் கூறி வருகின்றன. ஏபிவிபி எப்போதும் எந்தவொரு மொழியையும் திணிப்பதற்கு உறுதுணையாக இருக்காது. தனியார் பள்ளிகளில் படிக்கும் பணக்கார அரசியல்வாதிகளின் குழந்தைகள் மூன்று மொழிகளைக் கற்கும்போது, சாதாரண கிராமத்து ஏழை விவசாயிகளின் குழந்தைகளும் மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும் என்பதுதான் ஏபிவிபியின் நோக்கம். அதனை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
மாணவர் சங்கத் தேர்தலுக்கான தடை நீக்கக் கோரிக்கை
பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மாணவர் சங்கத் தேர்தல்கள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடையானது அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் கல்வியியல் ரீதியாக மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் ஏபிவிபி சுட்டிக்காட்டியுள்ளது.
இக்கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என ஏபிவிபி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அன்பில் மகேஸ் கண்டனம்
இதைத்தொடர்ந்து முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “PM Shri திட்டம் மீதான நிலைப்பாடு குறித்தும் தவெக அரசு தெளிவுபடுத்த வேண்டும். கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை பின்னோக்கி இழுக்கக் கூடாது!” என தெரிவித்துள்ளார்.
