சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக வெற்றிக் கழகம் குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, சிபிஎம், சிபிஐ, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது.
இந்த சூழலில் கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மன தாக்கல் செய்தார்.
அதில், திமுக மற்றும் அதிமுக போன்ற அரசியல் கட்சிகள் மீது வாக்குக்கு பணம் கொடுத்து ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதுபோன்று, கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி சென்னை ஒய்எம்சிஎம் மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய், பெற்றோர்கள் தனது கட்சிக்கு வாக்களிக்கும்படி அழுத்தம் கொடுங்கள் என்று குழந்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது.
இப்படி சட்டமன்றத் தேர்தல் நடைமுறையில் புனிதம் சமரசம் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்தது, சிறுவர்களை சுரண்டியது என முறைகேடுகள் நடந்த போதும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே திமுக, அதிமுக தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மே 21) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யலாம். ஆனால் ஒரு கட்சியை தகுதி நீக்கம் செய்ய முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பத்குமார், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வர் விஜய் ஆற்றிய உரையின்போது குழந்தைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள் இவ்விவகாரம் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறி இவ்வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
