மின்னம்பலம் சொன்னது போலவே.. விஜய் அமைச்சரவையில் விசிக.. வன்னி அரசுக்கு அமைச்சர் பதவி- திருமாவளவன் அறிவிப்பு

Published On:

| By Mathi

VCK Thirumavalavan Press Meet (1)

முதல்வர் விஜய் (Vijay) தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) இடம் பெறும் என்று அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். விசிகவின் துணைப் பொதுச்செயலாளரான திண்டிவனம் எம்.எல்.ஏ. வன்னி அரசு-க்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் திருமாவளவன் (Thirumavalavan) தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று மே 21-ந் தேதி செய்தியாளர்களிடம் தொல்.திருமாவளவன் கூறியதாவது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தவெக தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்கிற வெளிப்படையான அழைப்பை அடுத்து, எமது கட்சியின் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்களோடு கலந்தாய்வு செய்தோம்.

ADVERTISEMENT

பெரும்பான்மையோரின் கருத்தின் அடிப்படையில், இந்த அமைச்சரவையில் இடம்பெறுவது என்கிற முடிவை எடுத்திருக்கிறோம். வன்னியரசு, ஜோதிமணி ஆகிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களில், வன்னி அரசு அவர்களின் பெயரை பரிந்துரைப்பது என்று முடிவெடுத்திருக்கிறோம்.

கேள்வி: சார், நீங்க ஆட்சிக்கு ஆதரவு கொடுக்குறதுக்கு முன்னாடி திமுகவுடன் கொள்கை ரீதியா செயல்படுறோம்ன்றது இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உங்களுடைய கருத்தாகவும் இருந்தது. இப்போ ஆட்சியில் இடம்பெறும் பொழுது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி இடம்பெற வேண்டிய சூழல் இருக்கும். அடுத்தகட்ட நகர்வு திமுக கூட இணைந்து இருக்குமா?

ADVERTISEMENT

பதில்: இன்றைக்கு அமைச்சரவையில் நாங்கள் இடம்பெறுகிறோம் என்கிற அறிவிப்பை மட்டும் வெளியிடுகிறோம். மற்றவை பின்னர் நாம் விரிவாகப் பேசலாம். இன்றைய சூழலில் அமைச்சரவையில் இடம்பெறுவது என்பது எங்கள் கட்சியின் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

மே 8-ந் தேதி இரவு 6 மணிக்கு நாங்கள் நடத்திய இணையவழி உயர்நிலைக்குழு கூட்டத்திலும் 32 பேர் பங்கேற்றதில், ஒரு சிலரைத் தவிர அத்தனை பேரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்தார்கள். நிறைவாக தலைவர் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்படுகிறோம் என்கிற நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

அதனை ஒட்டித்தான் மே 9-ந் தேதி முற்பகல் பொதுச்செயலாளர்கள் சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் ஆகியோரோடு நான் உயர்நிலைக்குழுவின் முடிவை முன்வைத்து கலந்தாய்வு செய்தேன். நிறைவாக நாங்கள் வெளியிலிருந்து ஆதரவளிப்பது என்கிற முடிவை எடுத்தோம். நிபந்தனையற்ற ஆதரவை நல்குவது என்கிற முடிவை எடுத்தோம்.

அதன் அடிப்படையில் தான் ஆதரவு கடிதத்தையும் வழங்கினோம். செய்தியாளர்களிடையே பேசுகிற போது வெளியிலிருந்து ஆதரவு நல்குவதை உறுதிப்படுத்தினோம். ஆனாலும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்கிற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார்கள். எினாலும் (இருந்தாலும்) கூட நாங்கள் அதை மீளாய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

இந்தச் சூழலில், தவெக தரப்பிலிருந்து வெளிப்படையான அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஒட்டி கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவதை பரிசீலிக்க வேண்டும், “கூட்டணி ஆட்சி முறையை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்கிற கருத்தை முன்மொழிந்த இயக்கம் முதல் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி”.

1999-லேயே மூப்பனார் அவர்களோடு நாங்கள் தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது முன்வைத்த முழக்கம், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்பதாகும். ஆகவே தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி முறை என்பது அறிமுகமாகிறது.

எனவே தவெக விடுத்த அழைப்பையும் கணக்கில் கொண்டு, கட்சியின் நீண்டகால கனவையும் கருத்தில் கொண்டு, இந்த முடிவை எடுக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை பெரும்பான்மையான பொறுப்பாளர்கள் முன்வைத்திருக்கிறார்கள். ஆகவே இப்போதைக்கு நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

கேள்வி: திமுக கூட்டணியில உங்களுடைய நிலைப்பாடு என்ன சார்? கூட்டணியில இருக்கப்போறீங்களா இல்ல வெளியேறப்போறீங்களா?

பதில்: இதெல்லாம் நான் நாளைக்கோ நாளை மறுநாளோ உங்களை அழைத்து பேசுவேன். இது நான் அழைக்காம நீங்க வந்திருக்கீங்க, உங்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறோம். இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

முன்னதாக இன்று காலை நமது மின்னம்பலத்தில், “தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் விசிக இடம்பெறுவது உறுதியாகியிருக்கும் நிலையில் அந்த கட்சியிலிருந்து வன்னியரசுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது” என செய்தி பதிவிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share