முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியிலும் வந்தே மாதரம் (Vande Mataram) முதலில் பாடப்பட்டது; தமிழ்த் தாய் வாழ்த்து (Tamil Thai Vaazhthu) 3-வதாக பாடப்பட்டது கடும் சர்ச்சையாகி உள்ளது.
முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த மே 10-ந் தேதி பதவியேற்றனர். அப்போது வந்தே மாதரம் என்ற பாடல் முதலில் பாடப்பட்டது. தமிழ்நாட்டு அரசு விழாக்களில் எப்போதும் முதலில் பாடப்படும் தமிழ்த் தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டது. இது மிகப் பெரும் சர்ச்சையானது.
இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாட்டு அரசு விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும் என உறுதி அளித்தார்.
ஆனால் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியிலும் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டது; தமிழ்த் தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்த் தாய் வாழ்த்தை (Tamil Thai Vaazhthu) அவமதிப்பதா?- கனிமொழி
இது தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கூறுகையில், “இரண்டாவது முறையாக தவெக அரசின் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்கும் வகையில் மூன்றாவதாகப் பாடப்பட்டிருக்கும் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
சென்ற முறை இதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்ட போது, ‘இனி அவ்வாறு நடக்காது’ என்று கூறிய தவெக அரசு, தற்போது கண்டும் காணாமல் அமைதி காப்பது எதனால்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
சமஸ்கிருத மயமாக்கப்பட்ட வங்க மொழி பாடல்- கி.வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: இன்று (21.5.2026) காலை ஜோசப் விஜய் அவர்களது ஆட்சி, தனது அமைச்சரவையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை அறிவித்து, 23 புதிய அமைச்சர்கள் (காங்கிரஸ் கட்சிக்குத் தந்த இரண்டு அமைச்சர்கள் உள்பட) பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியின் தொடக்கத்தில், முதலிடம் ‘வந்தே மாதரம்’ பாட்டுக்கு! (சமஸ்கிருத மயமாக்கப்பட்ட வங்காளம்) இரண்டாவது, ‘ஜன கண மன அதி நாயக’ ‘நாட்டுப் பண்’ என்பதைப் பாடி, ‘நீராரும் கடலுடுத்த’ என்ற மொழி வாழ்த்துப் பாடல் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. முந்தைய ‘திராவிட மாடல்’ அரசு, தொடர்ந்து கடைப்பிடித்த செம்மொழியாம் எம் மொழி தமிழுக்கு முதலிடம் தந்து, தேசியப் பண் (‘ஜன கண மன’ பாட்டு) சட்டமன்றத்தில் இறுதியில்தான் இசைக்கப்படும் வகையில் நிகழ்வை நடத்தியபோது, அதற்கு அடாவடித்தனம் செய்த, முன்னிருந்த ஆர்.என்.ரவி என்ற ஆளுநரின் போக்கை அனுமதிக்காமல், இந்த உரிமையை அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிலைநாட்டினார்.
தமிழுக்கு நிரந்தரமாக மூன்றாமிடமா?
சென்றமுறை பதவியேற்பு விழாவின்போது நடைபெற்ற அதே முறை போன்றே, இம்முறையும் இன்றைய பதவியேற்பு விழாவையும் நடத்திக் காட்டி, தமிழுக்கு நிரந்தரமாக மூன்றாம் இடம் என்றாக்கியுள்ளார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் – அதனை ஏற்றுக்கொண்டுள்ளது தமிழ்நாடு புதிய அரசு.
முன்பு, இதுபற்றி வன்மையான கண்டனத்தைத் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகளும், நாமும் எழுப்பிய நிலையில், புதிய முதலமைச்சர் சார்பில், அவரது அமைச்சர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா அவர்கள் மூலம், ‘‘இனிமேல் இப்படி நடக்காது’’ என்றும், ‘‘தமிழ் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படுவதை ஏற்கமாட்டோம்’’ என்றும் கூறப்பட்ட வாக்குறுதி, இவ்வளவு விரைவில், சில நாள்களிலேயே காற்றில் பறக்கவிடப்படுகிறதா?
தமிழ்நாட்டிற்குத் தலை குனிவை ஏற்படுத்துவதா?
இந்த ஆட்சியின் தொடக்கமே தமிழ்நாட்டின் மரபை உடைத்து, சமஸ்கிருதத்தினை முதன் மொழியாக்கி, தமிழை மூன்றாவது இடத்திற்குத் தள்ளிவிட்டு மகிழும் ஆர்.எஸ்.எஸ். – சமஸ்கிருதப் பண்பாட்டுத் திணிப்பை, டில்லி எஜமானத் தனத்திற்கு அடிபணியும் போக்குக்கு இடந்தந்து தமிழ்நாட்டிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்துவதா?
‘கொள்கை எதிரிகளிடம்’ இப்படி ஒரு சமரசப் போக்கா? இதைத் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்கவே ஏற்காது!
புதிய ஆட்சியின் ‘‘நம்பகத்தன்மை’’ இப்போது இவ்வளவு குறுகிய இடைவெளியில் சந்தேகத்திற்குரிய கேள்விக்குறியாகலாமா?
முன்பு, ஆளுநர் மாளிகையின் ‘லோக் பவன்’ ஏற்பாடு செய்தது என்று ஒருவகை சமாதானம் கூறப்பட்டது.
இப்போது புதிய முதலமைச்சராகியுள்ள மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் ஆணைப்படி நடக்கவேண்டிய பொதுத் துறை (Public Department) நிகழ்ச்சிதானே! இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நிரல் முறைப்படி, புதிய முதலமைச்சர் ஒப்புதலுடன்தானே நடந்திருக்கவேண்டும்?
அலட்சியப்படுத்துவதா?
இது தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தமான உணர்வு பொங்கும், உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினை – அதனை அலட்சியப்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது!
இதனைத் தமிழ்நாட்டு மக்களின் எச்சரிக்கையாகக் கொண்டு, பார்க்கத் தவறினால், அதன் பாரதூர விளைவுகளை இவ்வளவு விரைவில் ஏற்கவேண்டிய கட்டாயம் புதிய அரசுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது!. இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், “இன்றைய நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்று கேட்டோம். ஆனால் இது லோக்பவன் (ஆளுநர் மாளிகை).. வந்தே மாதரம் முதலில் பாடுவோம்” என விளக்கம் தந்ததாக கூறினார்.
