தமிழக அமைச்சரவையில் ஐயுஎம்எல் கட்சியிலிருந்து ஷாஜகான் இடம்பெறுவார் என்று காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் முஸ்லிம் லீக்கிற்கு இடம் கொடுப்பதாகத் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐயுஎம்எல் அமைப்பின் அகில இந்திய தலைவர் சாதிக் அலி ஷியாப் மற்றும் தேசிய பொதுச்செயலாளரும் தற்போதைய அமைச்சருமான குஞ்சாலி குட்டி ஆகியோர் எங்களுக்கு அறிவுறுத்தினர்.
அகில இந்திய அமைப்பின் ஒப்புதலைப் பெற்று, தமிழகத்தில் இன்று காலையிலிருந்து மூன்று மணி நேரமாக விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். இக்கூட்டத்தின் முடிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெறுவது என்று ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம்.
எங்களுக்கு 2 எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் சூழலில், முதலில் தவெக ஒப்புக்கொண்ட ஒருவரைத் தேர்ந்தெடுத்து அனுப்புவோம் என்றும், அடுத்தவரைப் பற்றி பின்னர் சிந்தித்துக் கேட்டுப் பெறலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
அந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரத்தையும் மாநில மற்றும் தேசிய தலைவர் என்ற முறையில் என்னிடம் ஒப்படைத்தார்கள்.
அதன்படி, பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ-வான எம். ஷாஜகானை அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய நாங்கள் பரிந்துரைக்கிறோம் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
நீங்கள் பேசும்போது திமுக தலைவர் ஸ்டாலினைக் கேட்டுத்தான் முடிவெடுப்போம் என்று கூறினீர்களே?
காலையிலேயே நான் முன்னாள் முதல்வர் ஸ்டாலினிடம் பேசிவிட்டேன். நாங்கள் இதுவரை செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், நாங்கள் எடுக்கப்போகும் முடிவுக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
தவெக அமைச்சரவையில் பங்குபெறும் நீங்கள் இன்னும் திமுக கூட்டணியில் தொடர்கிறீர்களா?
கூட்டணி குறித்து இப்போது நாங்கள் பேசவில்லை. இது தேர்தல் காலத்து முடிவு அல்ல. மாறாக தமிழ்நாட்டு ஆட்சியில் பங்கேற்பதற்கான முடிவு.
திமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகப் பல போராட்டங்களை நடத்தும்போது, நீங்கள் ஆட்சியில் இருந்துகொண்டே அதில் கலந்துகொள்வீர்களா?
ஆட்சியில் இருக்கும்போது எப்படிப் போராட்டம் நடத்த முடியும்? ஆட்சியைப் பாதுகாப்பதுதான் ஆட்சியில் இருப்பவர்களின் கடமை. இருப்பினும் ஆட்சியில் குறைகள் இருந்தால் நிச்சயமாக அதைத் தட்டிக்கேட்போம்.
உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தவெக கூட்டணியில் இணைவீர்களா?
அந்தத் தேர்தல் நேரம் வரும்போது அது குறித்து முடிவெடுப்போம். தற்போது தவெக தலைமையிலான அரசிற்கு எங்களது ஒத்துழைப்பு இருக்கும். எங்களது கோரிக்கையாக, எதிர்காலத்தில் இரண்டு அமைச்சரவை பதவிகள் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதையும் உங்கள் மூலம் முன்வைக்கிறோம்.
