விஜய் அமைச்சரவையில் புதிய திருப்பம்! சிறுபான்மை நலத்துறை யாருக்கு? ஐயூஎம்எல்-க்கு அடித்த ஜாக்பாட்!

Published On:

| By Pandeeswari Gurusamy

IUML

தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்கிறது என்றும், அக்கட்சியின் சார்பில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவு அளித்தது. சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு விஜய் மே 10ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் விஜய் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தபோது சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. மேலும் அதிமுகவின் சிவி சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களும் தவெக அரசுக்கு ஆதரவு வழங்கியது. இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தங்களது அமைச்சரவையில் பங்கேற்குமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.

ADVERTISEMENT

தவெக-வின் இந்த அழைப்பு குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக, கட்சியின் மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு விரிவான ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தின் முடிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் அழைப்பை ஏற்று தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்பது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஷாஜகான், விஜய் தலைமையிலான அமைச்சரவையில் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார் எனப் பேராசிரியர் காதர் மொய்தீன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதன் மூலம் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தவெக-வில் காங்கிரசை தொடர்ந்து ஐயூஎம்எல் கட்சியும் தங்களது பங்களிப்பைத் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட தமிழக அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை யாருக்கும் ஒதுக்கீடு செய்யப்படாத சூழலில் ஐயூஎம்எல் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share