தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் சிடி நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் 2022ஆம் ஆண்டுக்கு முன் 8 ஆண்டுகள் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதன்பிறகு ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. கட்டண உயர்வை 2027 ம் ஆண்டு வரை மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி இந்த ஆண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று தகவல் வெளியானது.
இதுதொடர்பாக இன்று (மே 21) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சார துறை அமைச்சர் சிடி நிர்மல் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “இந்த ஆண்டும் கட்டணம் உயர்த்த வேண்டிய சூழல் இருப்பதாகத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இப்போதைக்குக் கட்டணத்தை உயர்த்தும் எந்த எண்ணமும் அரசிடமோ, முதல்வரிடமோ இல்லை. அரசாக முன்னெடுத்து உயர்த்தும் எண்ணம் எதுவுமில்லை” என்றார்.
சென்னையில் தற்போது அடிகடி மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்களே?
“கடந்த ஓராண்டில் மட்டும் பிற கான்ட்ராக்ட் பணிகளுக்காக தோண்டப்படும் குழிகளால் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரக் கேபிள்கள் வெட்டப்பட்டுள்ளன. இது ஒரு முக்கிய ரீசன். இது இல்லாமல் ஆங்காங்கே டிரான்ஸ்பார்மர் பழுதுகளும் ஏற்படுகின்றன.
இன்றிலிருந்து அதைச் சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் TANGEDCO-வை டேக் செய்து போடும்போது, அவர்களுக்குச் சரியான பதில் அளிக்கப்படும். அதாவது என்ன காரணங்களால் மின்சாரம் தடைப்படுகிறது, டெக்னிக்கல் ஃபால்ட் என்றால் எவ்வளவு நேரம் ஆகும் என்ற தெளிவுகள் மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
மின்சார வாரியம் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கோடி கடன் சுமையில் இருக்கிறது. ஊழியர்கள் பற்றாக்குறையும் இருக்கிறது. 1,40,000 பேர் வேலை பார்க்க வேண்டிய இடத்தில் இன்றைக்கு 70,000 பேர் தான் வேலை பார்க்கிறார்கள்” என்றார்.
