மாற்றமா… ஏமாற்றமா? அரசு விழாவில் மீண்டும் 3-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழக முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, இன்று (மே 21, 2026) நடைபெற்ற புதிய அமைச்சரவை விரிவாக்க விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் 3-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்திலும், தமிழ் ஆர்வலர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்படுவதும், நிகழ்ச்சியின் நிறைவில் ‘தேசிய கீதம்’ இசைக்கப்படுவதும் பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபாகும். ஆனால், புதிய தவெக அரசுப் பொறுப்பேற்றது முதல் இந்த நடைமுறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

முதலமைச்சர் பதவியேற்பின் போது எழுந்த சர்ச்சை

கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பதவியேற்ற அரசு விழாவில், வழக்கத்திற்கு மாறாக 2 முறை ‘வந்தே மாதரம்’ பாடல் இடம்பெற்றதாக சர்ச்சை எழுந்தது. விழாவின் தொடக்கத்திலும், முடிவிலும் முதலாவதாக ‘வந்தே மாதரம்’ பாடலும், இரண்டாவதாக ‘தேசிய கீதமும்’ இசைக்கப்பட்டன. வழக்கமாக முதலிடம் பெறும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ 3-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு, தவெக கூட்டணிக்கு ஆதரவளித்த இடதுசாரிகள் (கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

ஆதவ் அர்ஜுனாவின் விளக்கம்

முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் எழுந்த இந்த சர்ச்சை குறித்துத் தவெகவின் முக்கிய நிர்வாகியும், தற்போதைய அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்திருந்தார். அப்போது, “முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-ஆவதாகப் பாடப்பட்டதில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எந்தவித உடன்பாடும் இல்லை. இது அரசு அதிகாரிகள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களின் மரபு சார்ந்த நடைமுறைக் கோளாறால் ஏற்பட்டது. தவெக எப்போதும் தமிழ் மொழிக்கும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் முதன்மையான இடத்தையே வழங்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இன்றும் தொடர்ந்த அதே நடைமுறை

அதிகாரிகளின் தவறுதலால் தான் இது நடந்தது எனத் தவெக தரப்பில் சமாதானம் கூறப்பட்ட நிலையில், இன்று சென்னை மக்கள் மாளிகையில் நடைபெற்ற 23 புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவிலும் அதே நடைமுறை மீண்டும் அரங்கேறியுள்ளது.

இன்றைய விழாவின் தொடக்கத்திலும் ‘வந்தே மாதரம்’ முதல் பாடலாகவும், ‘தேசிய கீதம்’ இரண்டாவதாகவும் இசைக்கப்பட்டு, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மீண்டும் 3-ஆவது இடத்திற்கே தள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கண்டனங்கள் எழுந்த பிறகும், தவெக அரசு தனது இரண்டாவது முக்கிய விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share