முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
இதை எதிர்த்து அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு 2017ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து ஆகஸ்ட் 18, 2017 அன்று சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இறுதிக்கட்ட விசாரணை நடந்தது.
அப்போது சைதை துரைசாமி சார்பில் போதிய ஆதராங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறி நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
அதாவது, எந்த வலுவான ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி இத்தகைய அலட்சியத்தால் வழக்கை தள்ளுபடி செய்து விட முடியும் என்று எச்சரித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அமர்வு இந்த வழக்கின் விசாரணையில் இருந்து தாங்கள் விலகிக் கொள்வதாகவும் வேறொரு அமர்வில் இந்த வழக்கை தலைமை நீதிபதி பட்டியலிடுவார் என்றும் அறிவித்துள்ளனர்.
நீதிபதி மகேஸ்வரி பதவி காலம் மே 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மற்றொரு நீதிபதியான விஜய் பிஷ்னோய் 2029 ஆம் ஆண்டு ஓய்வு பெறுகிறார்.
எனவே தற்போது மீண்டும் ஏன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது என்ற பேச்சு தமிழக அரசியலில் எழுந்துள்ளது.
