முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று பொறுப்பேற்றவர்களில் ஆர்.வி.ரஞ்சித்குமாரும் (R.V. Ranjithkumar) ஒருவர். ஆர்வி ரஞ்சித்குமாருக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு 15,488 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் சோமசுந்தரத்தை தோற்கடித்தவர் ரஞ்சித்குமார். இத்தொகுதியில் திமுகவின் நித்யா சுகுமார் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
யார் இந்த ஆர்.வி.ரஞ்சித்குமார்? (R.V. Ranjithkumar)
2006-ல் வாலஜாபாத் ஒன்றிய குழு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரஸ் கட்சியில் அரசியல் பயணத்தை தொடங்கிய ஆர்.வி.ரஞ்சித்குமார் பின்னர் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக தீபா பிரிவிலும் இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரனின் அமமுகவில் பயணித்தார். 2021 சட்டசபை தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் அமமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெறும் 7,211 வாக்குகள் பெற்றார்.
பண்ருட்டி ராமச்சந்திரனுக்காக தனி கட்சி
அமமுகவில் இருந்து விலகி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் இணைந்தார். அங்கு ஓபிஎஸ்- பண்ருட்டி ராமச்சந்திரன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் எம்ஜிஆர் என்ற பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்து வைத்தார் ஆர்வி ரஞ்சித்குமார். இது குறித்து நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், “பண்ருட்டி ராமச்சந்திரன், ஏற்கனவே ரஞ்சித்குமார் அப்படிங்கிறவர் மூலமாக Movement for Growth and Rights Party – MGR-ன்னு ஒரு கட்சியை பதிவு செஞ்சு வெச்சிருக்காரு.. அந்த கட்சியைத்தான் ஓபிஎஸ் எலக்ஷனுக்கு பயன்படுத்துவார்” என பதிவு செய்திருந்தோம்.
பின்னர் ஓபிஎஸிடம் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் விலகி ஆர்.வி. ரஞ்சித்குமாரின் எம்ஜிஆர் அதிமுக பெயரிலேயே புதிய கட்சியை அறிவித்தார் பண்ருட்டி ராமச்சந்திரன். அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் ஆர்.வி.ரஞ்சித்குமார் அறிவிக்கப்பட்டார்.
ஆனாலும் தமது புதிய கட்சியை ஒரே வாரத்தில் கலைத்துவிட்டு அதிமுகவில் மீண்டும் சேருவதற்கு தீவிரமாக முயற்சித்தார் ரஞ்சித்குமார். அதிமுகவில் கதவுகள் திறக்கப்படாத நிலையில் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார்.
கட்சி தொடங்கி ஒரே வாரத்தில் அந்த கட்சியையும் கலைத்துவிட்டு தவெகவில் இணைந்து வேட்பாளராக போட்டியிட்டு இன்று அமைச்சராகி இருக்கிறார் ஆர்.வி.ரஞ்சித்குமார்.
