டிஜிட்டல் திண்ணை: வேலுமணி,   சி.வி சண்முகம் கைது? ஸ்டாலின் ஆட்டம் ஆரம்பம்!

Published On:

| By Aara

Velumani CV Shanmugam arrested?

வைஃபை ஆன் செய்ததும் அமைச்சர் பொன்முடி, அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து வீடு திரும்பிய காட்சிகளும், முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூரு கூட்டத்தில் இருந்து சென்னை திரும்பிய காட்சிகளும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றை பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப்  தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“கடந்த ஒரு மாதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணை, கைது தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்… ஜூலை 17ஆம் தேதி உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை குறிவைத்து சோதனையில் இறங்கியது அமலாக்கத்துறை. அன்று இரவு பொன்முடியை சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற அமலாக்கத் துறையினர் மறுநாள் அதிகாலை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மீண்டும் ஜூலை 18 மாலை 4 மணிக்கு பொன்முடியையும் அவரது மகன் கௌதம சிகாமணி எம்பி யையும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்தனர்.

அதன்படியே இருவரும் அன்று மாலை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு புறப்பட்டார்கள். வீட்டை விட்டு புறப்படும் போது பொன்முடி தனது குடும்பத்தினரிடம், ‘அனேகமாக நான் கைது செய்யப்படுவேன். ஜாக்கிரதையாக இருங்கள்’ என்று சொல்லிவிட்டு கைது நடவடிக்கையை எதிர்பார்த்துதான் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்றார்.

சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நீண்ட நிலையில்…  ஜூலை 19  உங்கள் ஆடிட்டரை வரச் சொல்லுங்கள் என்ற நிபந்தனையோடு பொன்முடியை நேற்று இரவு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் அமலாக்கத்துறை அதிகாரிகள்.

இதற்கிடையே பெங்களூரு கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் முடிந்து ஸ்டாலின் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அமலாக்கத் துறை அரசியல் செய்கிறது, எதையும் சட்டப்படி சந்திப்போம் என்று பேட்டி கொடுத்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

ஒரு பக்கம் பெங்களூரு கூட்டம் தந்த மகிழ்ச்சி இருந்தாலும்,  இன்னொரு பக்கம் செந்தில் பாலாஜி,  பொன்முடி என்று அடுத்தடுத்து அமலாக்கத்  துறை திமுகவை வேட்டையாடி வருவதையும் டென்ஷனோடு உணர்ந்திருந்தார் ஸ்டாலின்.

இந்த நிலையில்தான் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய பிறகு அன்று இரவே திமுகவின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களோடு ஒரு சிறிய ஆலோசனை மேற்கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின். அப்போது, ‘திமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்து இரண்டரை வருடங்கள் ஆகின்றன. ஆனால் தற்போது நடக்கும் அரசியல் சூழலைப் பார்த்தால் திமுக ஏதோ எதிர்க்கட்சியாக இருப்பதைப் போலவும்… வேறு கட்சி தான் ஆளுங்கட்சியாக இருப்பதைப் போலவும் உள்ளது.

தாக்குதல் ஆட்டம் ஆட வேண்டிய நாம் தற்காப்பு ஆட்டத்தை தான் இன்னமும் ஆடிக் கொண்டிருக்கிறோம்.  அதை விடுத்து நாம் அட்டாக் ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் திமுக தொண்டர்களில் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரது மன ஓட்டமாக உள்ளது’ என்று அந்த ஆலோசனையில் கலந்து கொண்ட மூத்த நிர்வாகிகள் ஸ்டாலினிடம் தெரிவித்தார்கள்.

அதைத் தொடர்ந்து இன்று ஜூலை 19 காலையும் ஆலோசனை மேற்கொண்டார் ஸ்டாலின். அதில், ‘மேற்கு மண்டலத்தில் அவர்கள் செந்தில் பாலாஜியை கைது செய்து திமுகவை முடக்க முயற்சிக்கிறார்கள். வட மாவட்டங்களில் பொன்முடியை கைது செய்ய பார்க்கிறார்கள். இவற்றுக்கு  நாம் பதிலடி கொடுத்தாக வேண்டும். அவர்கள் செந்தில் பாலாஜி மீது கை வைத்து விட்ட நிலையில் நாம் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்முடியை விசாரணைக்கு அழைக்கும் நிலையில் நாம் சி.வி. சண்முகத்தை கைது செய்ய வேண்டும். இதை நாம் செய்ய தவறினால் அவர்கள் மேலும் மேலும் திமுகவை சீண்டிக் கொண்டே தான் இருப்பார்கள்’ என்று ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார்கள் சீனியர் நிர்வாகிகள்.

முன்னாள் அமைச்சர்கள் மீது சிபிஐ நீதிமன்ற விசாரணையை தொடங்குவதற்கு ஆளுநரின் அனுமதி தாமதப்படுவது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் முதல் கட்டமாக வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தமிழக அரசு  கைது நடவடிக்கையை மேற்கொள்வதற்கு என்னென்ன வாய்ப்புகள்,  சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்று வழக்கறிஞர்களிடம் அதிகாரிகளிடமும் கேட்டிருக்கிறார் ஸ்டாலின். மிக விரைவில் இவர்களை கைது செய்வதற்கான சட்டச் சூழல்களை உருவாக்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்கிறார்கள் திமுக உயர்மட்ட வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு!

தக்காளி கிலோ ரூ.70 : மத்திய அரசு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share