not afraid of ED raids MK Stalin

ED ரெய்டுக்கெல்லாம் அஞ்சப்போவதில்லை: மு.க.ஸ்டாலின்

அரசியல்

அமலாக்கத் துறை ரெய்டுக்கெல்லாம் அஞ்சப்போவதில்லை என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு நடத்தியது தொடர்பாகவும், நேற்று பெங்களூருவில் நடைபெற்ற  எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று  (ஜூலை 19) கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறையைக் கொண்டு பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சியினரைக் குறிவைத்து சோதனைகள் நடத்தி அவதூறுகளைப் பரப்பி, அவப்பெயர் ஏற்படுத்தும் அரசியல் கயமைத்தனத்தில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்த இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள, ஜூலை 17-ஆம் நாள் காலையில் நான் பெங்களூருக்குப் புறப்படும் நேரத்தில், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடியையும், அவரது மகன் கௌதமசிகாமணி எம்.பி.யையும் குறி வைத்து, அமலாக்கத்துறையை ஏவி, சோதனை நடத்தியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
பழிவாங்கும் போக்குடன் பச்சையாக அரசியல் செய்யும் பா.ஜ.க. அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமான வெற்றியை எளிதாக்கி வருகின்றன என ஊடகத்தினரிடம் தெரிவித்துவிட்டு பெங்களூரு புறப்பட்டேன்.

கடந்த ஜூன் 24-ஆம் நாள் பீகார் தலைநகர் பாட்னாவில் தி.மு.க உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குச் சில நாட்கள் முன்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை ஏவப்பட்டதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது மட்டுமின்றி, பா.ஜ.க.வின் மதவாத – ஜனநாயக விரோத – எதேச்சாதிகாரத் தன்மையைக் கொள்கைப்பூர்வமாக எதிர்க்கின்ற கட்சியினர் மீது அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. ஆகிய அமைப்புகளை ஏவிவிடுவதும், எதிர்க்கட்சி வரிசையில் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் பா.ஜ.க.வுக்குத் தாவி வந்தால் அவர்களுக்குப் புனிதநீர் தெளித்து ‘புண்ணியவான்’கள் ஆக்கிவிடுவதும் நாடறிந்த ரகசியம்தான். நாம் தனியாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

அமலாக்கத்துறையின் அத்துமீறல்களையும் நள்ளிரவு கடந்த விசாரணையையும் ஜனநாயகத்துக்கு அச்சமூட்டும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம், பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி டிபேன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததை ஏடுகளும், தொலைக்காட்சி செய்தி சேனல்களும் வெளியிட்டுள்ளன.

டெக்கான் கிரானிக்கள் ஆங்கில ஏடு ‘சந்தேகத்தைக் கிளப்பும் அமலாக்கத்துறை சோதனைகள்’ (ED Raids Evoke Scepticism) என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில், இதுபோன்ற சோதனைகள் அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துவதற்காகவே மேற்கெள்ளப்படுகின்றன என்பதைப் பொதுமக்களும் உணர்ந்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.

தி இந்து ஆங்கில நாளேட்டில் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட விசாரணை’ (Selective Prosecution) என்று தலைப்பிட்ட தலையங்கத்தில், “செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதே வேளையில், தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல்வாதிகள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த இரு அமைச்சர்களை மட்டும் குறிவைத்துப் பாய்ந்துள்ள நடவடிக்கை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் சி.பி.ஐ. மற்றும் வருமானவரித் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முறையான விசாரணையையும்கூட தொடரவில்லை.

குட்கா ஊழல் வழக்கில் சிக்கியுள்ள 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகமே அனுமதி அளித்த பிறகும், அதே வழக்கில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் இருவர் மீது வழக்குத் தொடர்வதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இசைவு தர மறுத்து வருகிறார்” என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் புலனாய்வு – விசாரணை அமைப்புகள் மட்டுமின்றி, ஆளுநர் என்ற பதவியையும் அரசியல் பார்வையுடனேயே செயல்படுத்தி வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில்,  “பா.ஜ.க.வின் ‘பண்பு’ அப்படிப்பட்டது என்பதை நன்கறிந்த அரசியல் இயக்கங்களின் ஒருங்கிணைப்பாக நேற்றும் (ஜூலை 18), அதற்கு முந்தைய நாளும் (ஜூலை 17) கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் நடந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள்,  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சித் தலைவர்கள் என ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட – பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைக் காத்திட வேண்டும் என்பதில் உறுதி கொண்ட – மதவாதமற்ற சகோதரத்துவமான இந்திய ஒருமைப்பாட்டை பேணிப் பாதுகாத்திட வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட 26 கட்சிகளின் ஒருங்கிணைப்பாக பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒருமித்த சிந்தனையுடன் ஒன்றுபட்டிருக்கும் இயக்கங்கள் அடங்கிய கூட்டணிக்குப் பொருத்தமான ஒரு பெயர் பற்றிய ஆலோசனைகளும் சிந்தனைகளும் வெளிப்பட்டபோது, அனைவரும் ஏற்றுக்கொண்ட பெயர்தான் இந்தியா. I.N.D.I.A (Indian National Developmental Inclusive Alliance) இந்திய ஒன்றியம் முழுவதும் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இந்திய மாநிலங்கள் அனைத்தும் பாரபட்சமின்றி ஒருங்கிணைந்த வளர்ச்சியினைப் பெற வேண்டும்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியா ஒருமைப்பாட்டுடன் திகழ வேண்டும் என்ற நோக்கத்துடன் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டது.  ராகுல் காந்தி  இந்தியா என்ற கூட்டணியின் பெயரை முன்மொழியுமாறு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜியிடமும்,  என்னிடமும் கேட்டுக் கொண்டார். அதன்படியே கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டது.

எதிர்க்கட்சிகள் கூடுவது ஃபோட்டோ எடுக்கத்தான் என வெளியில் கேலி பேசிய பா.ஜ.க. தலைமைக்கு உள்ளுக்குள் பயம் ஆட்டிப் படைத்தது. மத்திய பிரதேசத்தில் தனது கட்சி நிர்வாகிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோதும், அந்தமானில் பேசியபோதும் எதிர்க்கட்சிகளை, குறிப்பாக தி.மு.க.வைத் தேவையின்றி விமர்சித்துப் பேசினார்.

பெங்களூரு நகரில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட நிலையில், அவசர அவசரமாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டது. அ.தி.மு.க.வின் ஒரு பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கும் பழனிசாமி உள்பட பல கட்சியினரும் விழுந்தடித்து ஓடி, தங்கள் விசுவாசத்தைக் காட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகினர். அவர்களை விட்டால் இவர்களுக்கு ஆளில்லை. இவர்களை விட்டால் அவர்களுக்கு ஆளில்லை. இருதரப்புக்கும் மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பதுதான் உண்மையான நிலைமை.

ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் கட்சியினரை அருகருகே வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றம்சாட்டி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் பேசியது ‘ப்ளாக் காமெடி’ எனப்படும் வேடிக்கையான வேதனை.
இவர்களிடமிருந்து இந்தியாவைக் காத்திடவும், 2024-இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட இந்தியாவையும் அதன் ஜனநாயகத் தன்மையைக் காத்திடவும் பெங்களூரு நகரில் உண்மையான இந்தியா உருவாகியிருக்கிறது.

இத்தனை நாள் இந்தியாவின் தேசபக்திக்கு தாங்கள் மட்டுமே ஒட்டுமொத்த குத்தகைதாரர்கள் போல செயல்பட்டு வந்த பா.ஜ.க.வினரும் அதன் பரிவாரத்தினரும், ஜனநாயக இயக்கங்களின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டியதும், அந்தப் பெயரை உச்சரிப்பதற்கே தயக்கம் காட்டியதன் மூலம், அவர்களின் போலி தேசபக்தி முகமூடி கழன்று தொங்குவதைக் காண முடிகிறது.

இந்தியா என்ற சொல் இப்போது அவர்களுக்குப் பிடிக்காத சொல்லாக ஆகிவிட்டது. இந்தியாவைப் பிடிக்காவிட்டால் ‘பாகிஸ்தானுக்குப் போ’ என மதவாத சிந்தனையுடன் பேசிய பா.ஜ.க.வினர் இப்போது எந்த நாட்டுக்கு விசா வாங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியிலிருந்து பா.ஜ.க.வுக்கும் – அதனுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பவர்களுக்கும் ‘விசா‘ வழங்கி வெளியே அனுப்பிட மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். அதனை மறைக்கத்தான் அமலாக்கத்துறை தொடங்கி அத்தனை அமைப்புகளையும் ஏவி அச்சுறுத்தும் வேலைகள் நடக்கின்றன. ‘இந்தியா’வில் உள்ள யாரும் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை. உண்மையான இந்தியாவின் எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்ட வேண்டியதே நமது முதன்மையான பணி” என்று கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

பிரியா

“தமிழக அரசுக்கு அதிகாரமில்லை” : ஆன்லைன் கேம் வழக்கில் மத்திய அரசு!

மோடியாவது EDயாவது?: அட்ரஸை தரேன் ரெய்டுக்கு வாங்க: உதயநிதி பேச்சு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *