டெல்டா விவசாயிகளுக்கு இந்த அரசு துரோகம் விளைத்து வருவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டி உள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் ரோஜ்கார் மேளா நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 24) நாடு முழுவதும் நடைபெற்றது. 40 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்வில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக சிறப்புரை ஆற்றினார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் தனியார் கல்லூரியில் நடந்த இந்த நிகழ்வில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் தபால் துறை, வங்கி துறை, ரயில்வே மற்றும் உள்துறை ஆகிய மத்திய அரசு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்ற 51 பேர் பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “பொறுப்பில்லாத அரசாக திராவிட மாடல் அரசு இருப்பதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் படும் துயரமே எடுத்துக் காட்டாக உள்ளது. இதனை பல்வேறு எதிர்க் கட்சிகள் சுட்டிக்காட்டினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது அரசின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது.
சேமிப்பு கிடங்கை கட்டுவது தொடர்பான எந்த ஒரு திட்டமிடலும் கிடையாது என்றும் டெல்டா காரர் என்று கூறும் மாநிலத்தின் முதல்வர் பெயரளவிற்கு மட்டும் தான் அந்தப் பெயரை பயன்படுத்துகிறாரே தவிர டெல்டா விவசாயிகளுக்கு இந்த அரசு துரோகம் விளைத்து வருவதாக தெரிவித்தார்.
மது விற்பனை அதிகரிப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் 90% ஆண்கள் குடிப் பழக்கத்தால் இறப்பதால் விதவைகள் உருவாகிறார்கள். அதனால் இளம் விதவைகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அவர்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் நான் பேசியும் தற்பொழுது வரை அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
