திருப்பத்தூரில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவில், ராட்சத ராட்டினம் திடீரென சாய்ந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா நேற்று (ஆகஸ்ட் 3) கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பலரும் காவடி தூக்கியும், தேர் இழுத்தும் வழிபாடு மேற்கொண்டனர்.
இந்த திருவிழாவில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக சிறிய மற்றும் பெரிய அளவிலான ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாலை நேரத்தில் இந்த ராட்டினத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் மகிழ்ச்சியாக சுற்றி வந்தனர்.
அப்போது சுற்றிக்கொண்டிருந்த ராட்டினம் திடீரென பழுதாகி ஒருபக்கம் சரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி அப்பகுதியை விட்டு வெளியேறினர். ராட்டினத்தில் அமர்ந்திருந்த பலரும், “காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…” என்று அலறினர்.
உடனடியாக ராட்டினத்தை நிறுத்திய ஆப்பரேட்டர்கள், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் உதவியுடன் ராட்டினத்தின் மீது ஏறி குழந்தைகள், பெண்கள், ஆகியோரை பத்திரமாக மீட்டனர்.
ராட்டினத்தில் இரண்டு பேர் உட்காரும் இடத்தில் நான்கு பேர் அமர்ந்ததால் எடை தாங்காமல் ராட்டினம் ஒருபக்கம் சாய்ந்ததாகவும், அனுமதியின்றி ராட்சத ராட்டினம் இயக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆடி அமாவாசை… ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!
விஜய்யின் ‘கோட்’ மூன்றாவது சிங்கிள்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!