ஸ்பார்க் என பெயரிடப்பட்டு வெளியிடப்பட்ட கோட் படத்தின் மூன்றாவது பாடலை சமூக வலைதளங்களில் பலரும் மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர்.
விஜய் நடித்து முடித்திருக்கும் 68-வது படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT). இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தி கோட் படம் பற்றிய செய்தி, தகவல் சமூக வலைதளங்களில், ஊடகங்களில் இடம்பெறும் வகையில் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இருந்த போதிலும் தி கோட் படம் பற்றி வெளியாகும் புகைப்படம் தொடங்கி, பாடல்கள், சிங்கிள்ஸ் என அனைத்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் ‘தி கோட்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பாடலில் இடம்பெற்றுள்ள விஜய்யின் தோற்றம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மூன்றாவது சிங்கிள் எப்படி?
‘ஸ்பார்க்’ என பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் மூன்றாவது சிங்கிளுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து விருஷா பாலுவுடன், யுவன்சங்கர் ராஜா இணைந்து இப்பாடலை பாடியுள்ளார். கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
பின்னணியில் ஒலிக்கும் ‘பீட்’ கவனம் பெறுகிறது. ஆங்காங்கே பாடலில் ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இசை ஒருவகையான ‘வைப்’பை தருகிறது. ஆனால் அதற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு வரிகள் வலிமையாக, அழுத்தமாக இல்லை.
லிரிக்கல் வீடியோவுக்கு நடுவே வரும் விஜய்யின் தோற்றம் அனிமேஷன் பொம்மைப் போல காட்சியளிக்கிறது என விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்வதற்கான கச்சாப்பொருளாக மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தி கோட் படத்தின் புகைப்படங்கள், சிங்கிள்ஸ் பயன்பட்டு வருகிறது என்கின்றனர்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாடு நிதியுதவி… நன்றி தெரிவித்த பினராயி
ஹெல்த் டிப்ஸ்: லேடீஸ் ஸ்பெஷல்… பீரியட்ஸுக்கு முன்… தவிர்க்க வேண்டிய, சாப்பிட வேண்டிய உணவுகள் எவை?
பியூட்டி டிப்ஸ்: உங்கள் எடை கூடுவதாக உணர்கிறீர்களா?