2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் ஒரே நேரத்தில், திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
எம்.ஜி.ஆர் – சிவாஜி காலம் தொட்டு, ரஜினி – கமல், விஜய் – அஜித், தற்பொழுது சிவ கார்த்திகேயன் – விஜய் சேதுபதி என இரு துருவ ரசிகர் படை தமிழ் சினிமாவில் எப்பொழுதும் இருந்து கொண்டே தான் உள்ளது.
அந்தவகையில் 90-களில் ரஜினி கமல் ரசிகர்கள் சண்டைகளுக்கு பிறகு, 20-களின் தொடக்கத்தில் விஜய் – அஜித் ரசிகர்கள் சண்டை அதிகமாகனது.

ஒவ்வொரு ரசிகர்களும், தங்களுக்கு பிடித்த நடிகர்களின் புகழ்பாடுவதும், பிற நடிகர்களை விமர்சிப்பதும் தொடர்ந்து இணையங்களில் நடந்து வருகிறது.
அந்தவகையில், தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களான விஜய், அஜித் நடித்த திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனால் இணையத்தில் விஜய், அஜித் ரசிகர்களுக்கிடையே விவாதம் வலுத்துள்ளது.
வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
“வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தொடங்கி விட்டது. இரண்டு ஆக்ஷன் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. வாரிசு பொங்கலுக்கு வெளியாகும்” என ஸ்ரீ வெங்கடேஷ்வரா தயாரிப்பு நிறுவனம் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி தெரிவித்திருந்தது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பானது தாய்லாந்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனால் பொங்கலுக்கு துணிவு திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

துணிவு, வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கலுக்கு வெளியாவது உறுதி தான் என்று திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜனவரி 12-ஆம் தேதி துணிவு திரைப்படமும், ஜனவரி 13-ஆம் தேதி வாரிசு திரைப்படமும் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் திரைப்படம், விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால், அதிக ஸ்கிரீன் கிடைக்காது. இதனால் துணிவு திரைப்படத்தின் முதல் நாள் கலெக்ஷன் வாரிசு திரைப்படத்தை காட்டிலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக 2014-ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்த ஜில்லா, அஜித் நடித்த வீரம் திரைப்படங்கள் திரையரங்குகளில் நேருக்கு நேர் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
