தமிழ் திரையுலகில் கமர்ஷியல் மற்றும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து, தனக்கெனப் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் கார்த்தி. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான ‘வா வாத்தியார்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பல முக்கியப் படங்களில் கார்த்தி கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கார்த்தியின் திரையுலகப் பயணத்தில் 31-ஆவது (Karthi 31) திரைப்படமாக உருவாகவுள்ள புதிய படத்தை ‘டாடா’ பட புகழ் இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கவுள்ளார் என்ற சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தியை கவர்ந்த கணேஷ் கே.பாபுவின் ஒன்லைன்
கவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘டாடா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கணேஷ் கே.பாபு. அண்மையில் இவர் ரவி மோகனை வைத்து ‘கராத்தே பாபு’ என்ற அரசியல் ஆக்ஷன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கார்த்தியைச் சந்தித்து கணேஷ் கே.பாபு (Ganesh K Babu) ஒரு புதிய கதையைக் கூறியுள்ளார். அந்த ஒன்லைன் மற்றும் கதை சொல்லல் பாணி கார்த்திக்கு மிகவும் பிடித்துப் போனதால், உடனடியாக அந்தத் திரைக்கதையை முழுமையாக உருவாக்க கணேஷுக்கு கார்த்தி பச்சைக்கொடி காட்டியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிஸியான கால்ஷீட்டில் நடிகர் கார்த்தி
தற்போது கார்த்தி கைவசம் பல பிரம்மாண்டமான திட்டங்கள் உள்ளன. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ (Sardar 2)திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளிலும், ‘தானாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்கும் ‘மார்ஷல்’ என்ற பீரியட் ஆக்ஷன் படத்திலும் கார்த்தி கவனம் செலுத்தி வருகிறார். இதுமட்டுமன்றி, ‘மேட்’ (Mad) பட புகழ் இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் உருவாகும் தனது 30-ஆவது படத்திலும் (Karthi 30) அவர் இணைந்துள்ளார். இந்த முந்தைய கமிட்மென்ட்டுகள் அனைத்தையும் முழுமையாக முடித்த பிறகே, கணேஷ் கே.பாபு உடனான ‘கார்த்தி 31’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் எனத் தெரிகிறது.
Karthi 31 ரசிகர்கள் மத்தியில் எகிறும் எதிர்பார்ப்பு
இயக்குநர் கணேஷ் கே.பாபுவின் எமோஷனல் மற்றும் கமர்ஷியல் மேக்கிங் ஸ்டைலும், கார்த்தியின் யதார்த்தமான நடிப்புத் திறனும் இணையும் இந்தப் புதிய கூட்டணி இப்போதே கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. கார்த்தியின் முந்தைய ஹிட் படங்களைப் போல இதுவும் ஒரு பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராகவோ அல்லது ஆக்ஷன் டிராமாவாகவோ அமையலாம் என்று கணிக்கப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
