ஹபீபி!

Published On:

| By ஸ்ரீராம் சர்மா

Habeebi Tamil Movie Review by Sriram Sharma

ஸ்ரீராம் சர்மா

கடையநல்லூர் இஸ்லாமியர்களது வாழ்பனுபவத்தின் தொகுப்பாக மிளிர்கிறது மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியான வி.எஸ். முஹம்மத் அமீன் எழுதிய ‘ஹபீபி’ திரைப்படம்.

கஸ்தூரி ராஜா கேரக்டர் மரணிக்கும் முன்பாக அதன் இறுதித் தொழுகை நிகழும் காட்சியின் மீது ‘தறி ஓட்டும் ஒலி’ அதனை ஏற்றிக் காட்டியிருந்த விதம்…

ADVERTISEMENT

“இறைவா, இறைவா… நான் நட்டத் தொழிலை செய்ய வாக்கப்பட்டவன்தான் என்றாலும், மானம் மறைக்கும் ஆடைகளை நெய்யும் உயர்ந்த நிலையில் அடியேனை வைத்து அருளியதற்காக உனக்கு நன்றி…நன்றி…” என்றபடியே விடைபெறுவது போல தொனித்து நின்று நெஞ்சகத்தை நிரடியது.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்த தென்பாண்டி நாட்டின் வளமான விவசாய பூமியான தென்காசி கடையநல்லூரை மையமாக வைத்து திரைப்படுத்தப்பட்ட ‘ஹபீபி’ நெடுகிலும்…

ADVERTISEMENT

எதிர்பார்ப்புகளையும், கவலைகளையும் மட்டுமே சுமந்த முகங்களே காணக் கிடைப்பது ஆயாசமாக இருந்தாலும், தான் விரும்பி மணமுடிக்கக் காத்திருந்த ஹீரோவை தன் தன்மானத்தை முன் வைத்து மறுத்துக் கிளம்பும் அந்தக் கேரக்டர் சுருக்கென மனதை சுண்டியிழுக்கிறது.

கதையின் நாயகனான ஈஷா புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு திரைக்கு முகம் கொடுத்து அழகாக நிறைகிறார். வடிவமைக்கப்பட்ட தனது கேரக்டருக்கென வாய்த்தது மிகச்சில முக பாவங்கள்தான் எனினும், அதனை நிறைவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ADVERTISEMENT

அடிப்படையில் ஈஷா ஒரு ‘அத்லெட்’ எனச் சொன்னார்கள். அவர் ஓட வேண்டிய தூரம் இன்னுமின்னும் உள்ளது.  நிச்சயம் ஓடுவார். அவருக்கும் வாழ்த்துகள்!

இசையும், அதன் இடையீடும் அளவுக்கு அதிகமாக அமைந்த விதத்தை தவிர்த்திருக்கலாமோ?

எனது பால்ய நண்பன் ஷாகுல். அவனை பாத்திரப் பெயரோடு வெள்ளித் திரையில் கண்ட வகையில் எனக்கு மெத்த மகிழ்ச்சி!

கவனிக்க, வீரியமிகு வி. எஸ். முஹம்மத் அமீனின் படைப்புக்குள் பலவிதமான ஊடு பாவுகள் உண்டு…

என்னதான் கால் ஓய தறி ஓட்டினாலும் வாழ்க்கையை ஓட்ட முடியாத மனிதர்களின் கதை உண்டு. அரபு நிலத்தில் உயிர் ஓய சம்பாதித்த பணத்தை அடுத்தவனிடம் கொடுத்து ஏமாந்த கதை உண்டு. காட்டு வழியைக் கடந்து போகும் பயணத்தின் முடிவில் தன் முன்னாள் காதலியை சந்தித்த கதை உண்டு.

எல்லாவற்றுக்கும் மேலாக, “அபு, உன்னை எனக்குப் பிடித்திருக்கின்றது. ஆனால், எனக்கும் – என் குடும்பத்தின் தன்மானத்துக்கும் ஓர் இழுக்கு ஏற்பட்டபோது, அதைத் தட்டிக் கேட்க திராணியில்லாமல் நின்றதால் உன்னை எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது” என்றபடி வாழ்க்கையை நகர்த்திப் போகும் தன்மானக் காரிகையின் கதை உட்படப் பற்பல உட்கூறுகள் அதில் உண்டு.  

என்றாலும், திரைப் படத்துக்கான நீளம் கருதியோ என்னமோ ஒட்டுமொத்த திரை மொழியையும் தன் போக்கில் செலுத்திக் கொண்டே போகிறார் இயக்குனர்.

******

ஆயினும், குத்து – வெட்டு – பகைமை – ரத்தம் – அழுக்கு – அமானுடம் என எந்தக் கருமாந்தரங்களும் இன்றி மெல்ல நகர்வதால் திரையரங்கம் நிம்மதியாக பாப்கார்ன் பொட்டலத்தை காலி செய்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாக, இஸ்லாமியர்களின் உண்மையான வாழ்வையும் வழமையையும் ஊன்றிச் சொல்லும் ‘ஹபீபி’ திரைப்படமானது – ‘டாக்குமெண்ட்டரி’ எனும் அளவுகோலுக்குள் சிக்கிவிடாமல் – அழகாகத் தப்பித்து – திரைமொழி ஆக்கப்பட்டு வெற்றி பெற்றமைக்கு ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி மற்றும் எடிட்டர் வி.எஸ். மதி கொடுத்த பேருழைப்பு பெரிது என வாழ்த்தியே ஆக வேண்டும்!

திரைப்படம் முடிந்த தருணம் ஆயாசமானதொரு கேள்வி எழுந்தது.

‘ஹபீபி’ என்னும் சொல்லுக்கு ‘அன்புக்குரியவனே’ என்பது பொருளாகும் என்கிறது அகராதி. ‘அன்புக்குரியவளே’ என்றும் பொருள்படும் என்றால் அதில் குற்றமுண்டா!?  

அன்புக்குரியதான அந்த அழகான மண வாழ்க்கையானது அப்பாவி அபூவுக்கும் – அழகான நிலோஃபருக்கும் இயல்பாக அமையாமல் போனது ஏனோ?   

எல்லாம் வல்ல

ஹபீபியாம் அல்லாஹ்

மறுமையில் நின்றுதான்

விடை சொல்வானோ!?

‘ஹபீபி’ குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் !

பேரன்புடன்,

ஸ்ரீராம் சர்மா

Photo of author
ஸ்ரீராம் சர்மா

ஸ்ரீராம் சர்மா, எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆய்வாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share