பண வேட்டையில் இறங்கும் அர்ஜுன் தாஸ்: ‘கான் சிட்டி’ படத்தின் மிரட்டலான டிரெய்லர் ரிலீஸ்!

Published On:

| By Santhosh Raj Saravanan

con city trailer arjun das anna ben on a mission for money

அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கான் சிட்டி’ (Con City). ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க க்ரைம், காமெடி மற்றும் சுவாரசியமான திருப்பங்களுடன் ஒரு பக்கா என்டர்டெய்னராக இந்த டிரெய்லர் அமைந்துள்ளது.

பணத்தை அச்சிடும் இயந்திரமும்… சுவாரசிய பின்னணியும்

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரில், கதாபாத்திரங்கள் தற்செயலாக கள்ள நோட்டுகளை அச்சிடும் ஒரு இயந்திரத்தைக் கண்டறிவது போல் காட்டப்பட்டிருந்தது. தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரில், அந்தப் பணத்தை வைத்து அவர்கள் ஒரு படம் தயாரிக்க முயல்வது போன்ற சுவாரசியமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில், மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனின் மருத்துவ உதவிக்காக அர்ஜுன் தாஸ் தலைமையிலான ஒரு விசித்திரமான குழு இந்த ஆபத்தான பண வேட்டையில் இறங்குகிறது. ஒருபுறம் க்ரைம் பின்னணி இருந்தாலும், அர்ஜுன் தாஸ் பிரபல காமெடி நடிகர் விடிவி கணேஷ் பாணியில் பேசும் காட்சிகள் படத்தில் நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது என்பதை உறுதி செய்கிறது.

ADVERTISEMENT
Con City – Official Trailer | Arjun Das | Anna Ben | Yogi Babu | Sean Roldan | Harish Durairaj
அர்ஜுன் தாஸ் – அன்னா பென் முதல் கூட்டணி

தமிழ் சினிமாவில் தனது கணீரென்ற குரலால் தனி முத்திரை பதித்த அர்ஜுன் தாஸ் (Arjun Das) மற்றும் ‘கொட்டுக்காளி’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த மலையாள நடிகை அன்னா பென் (Anna Ben) ஆகிய இருவரும் முதன்முறையாக இத்திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி, தம்பி ராமையா, ராதாரவி, ரமேஷ் திலக், பொன்வண்ணன் மற்றும் சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் கைகோர்த்துள்ளது.

தொழில்நுட்பக் குழு மற்றும் ரிலீஸ் தேதி

‘கான் சிட்டி’ திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, அருள் மோசஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் மற்றும் சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. அர்ஜுன் தாஸின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஜூன் 26 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share