”சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தாம் பேசுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது” என்று இயக்குநர் அமீர் (Ameer) குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எழுத்தாளர் ம.காமுத்துரை எழுதிய “குதிப்பி” நாவல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நாவலை மையமாக வைத்து ‘குக்கர்’ திரைப்படத்தை இயக்குகிறார் இயக்குநர் கரு. பழனியப்பன்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசியதாவது: கடந்த முறை இதே அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நான் பேசியதற்காக, இனிமேல் அமீரை இந்த அரங்கத்துக்கு கூப்பிடக் கூடாது என உத்தரவு வந்துள்ளது.
அமீர் நிகழ்ச்சியில் பங்கேற்றால் உங்கள் விழாவுக்கே இடம் இல்லை; அதனால் அமீரை தவிர்த்துவிடுங்கள் என சொல்லி இருக்கின்றனர்.
மாணவர்களுக்கு உதவித்தொகை விருது வழங்குற விழாவில அரசியல் பேசி, பொதுவெளிகள் எல்லாம் அரசியல் பேசியவர்கள்தான், இன்று தமிழ்நாட்டையே அரசியல் படுத்திய அண்ணாவின் பெயரில், தமிழர்களுக்கு அரசியலை கற்றுக் கொடுத்த கலைஞர் அவர்கள் கட்டிய நூற்றாண்டு இந்த நூலகத்தில் அரசியல் பேசக் கூடாது என்று சொல்கின்றனர். இதுதான் மாற்றம். இந்த மாற்றத்தை நாம் வரவேற்கிறோம்; அதனால் இங்கே நான் அரசியல் பேசவில்லை.
கரு பழனியப்பனின் அரசியல் பயணம் அவருக்கு ஒரு தேக்க நிலையை ஏற்படுத்திவிட்டது. அதனால் அவர் இழந்தது அதிகம். இவர் ஒரு கட்சிக்கு ஆதரவாக ஒரு கொள்கைக்கு ஆதரவாக நிற்கிறார் என்கிற போது, அந்த கட்சி மாதந்தோறும் கரு.பழனியப்பனுக்கு செக் கொடுக்கிறது என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் தன் சொந்த பணத்தை இழந்தவர் கரு.பழனியப்பன். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இது தெரியாது.
அதனால் இதனை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். எப்போதும் நாம் அமைதியாக இருக்கக் கூடாது. நாம் அமைதியாக இருந்தால் “ பெட்டி” வாங்கிவிட்டதாக நம்பிவிடுகிறார்கள். இவ்வாறு இயக்குநர் அமீர் பேசினார்.
