திருப்பரங்குன்றம் தீபம்: விஜய்யிடம் அறிக்கை கேட்ட ஆளுநர்?

By Mathi

|

Published on 25 Nov 2026, 7:24 PM

Thiruparankundram Deepam_ Governor Seeks Report

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதது ஏன்? என்பது குறித்து தமிழக முதல்வர் விஜய்யிடம் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அறிக்கை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் நவம்பர் 24-ந் தேதி மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்து உச்சநீதிமன்றம் நவம்பர் 20-ந் தேதி இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட வேண்டும் என இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் ஆளுநர் அர்லேகரிடம் மனு அளிக்கப்பட்டது.

விஜய்யிடம் அறிக்கை கேட்க கோரிக்கை

இந்த நிலையில் ‘We the Leaders’ அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் அபிலாஷ் கோபிநாதனும் ஆளுநரிடம் மனு அளித்துள்ளார். அரசியல் சாசனத்தின் 167-வது பிரிவின் கீழ், உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? உத்தரவு செயல்படுத்தப்படாததற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து முதல்வர் விஜய்யிடம் ஆளுநர் விரிவான அறிக்கையைப் பெற வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசியல் சாசனத்தின் 144-வது பிரிவின்படி உச்சநீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்த அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகார அமைப்புகளும் ஒத்துழைக்க வேண்டியது கட்டாயம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்ப கோரிக்கை

மேலும் அரசியல் சாசனத்தின் 355 மற்றும் 356-வது பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா என்பதை ஆளுநர் ஆராய வேண்டும் என்றும், தேவைப்பட்டால் ஜனாதிபதிக்கு சிறப்பு அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நேற்று பிஎல் சந்தோஷ் எச்சரிக்கை

மேலும், திருப்பரங்குன்றத்தில் உச்சநீதிமன்றம் சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாதது தொடர்பாக பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் நேற்று (நவம்பர் 24) கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதாகக் குற்றம்சாட்டிய பி.எல்.சந்தோஷ், விஜய் அரசு தன்னால் சமாளிக்க முடியாத ஒரு பிரச்சினையை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், சட்ட ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்திருந்தார்.

ஆளுநர் அறிக்கை கேட்டாரா?

இந்த பின்னணியில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் விஜய்யிடம் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதது தொடர்பாக ஆளுநர் அர்லேகர் அறிக்கை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு

முன்னதாக உச்சநீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதாக மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா இன்று (நவம்பர் 25) உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதுடன், நீதிமன்றம் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்படாததற்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel