ADVERTISEMENT

டெட் தேர்வு… ஆசிரியர்களின் பாதுகாப்பு : பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

Published On:

| By Kavi

ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றம் தீர்ப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 25) கடிதம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “ இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009 (The RTE Act, 2009) பிரிவு 23 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம், 1993 (NCTE Act 1993), பிரிவு 12A-ல் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, ஆசிரியர்களைப் பாதுகாப்பதுடன், பதவி உயர்வுகளுக்கு தகுதி உடையவர்களாக இருப்பதையும், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்திட வேண்டும் 

ADVERTISEMENT

சிவில் மேல்முறையீடு எண் 1405/2025, 1385/2025 மற்றும் 1386/2025 மற்றும் பிற வழக்குகளில் 01.09.2025 அன்று  உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பில், ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், அப்பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் TET தகுதியைப் பெற வேண்டும் என்றும், மேலும், ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள் பணியைத் தொடர அனுமதிக்கப்பட்டாலும், TET தகுதி பெறாவிட்டால் பதவி உயர்வுக்குத் தகுதியற்றவர்களாக இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமமானது (National Council for Teacher Education-NCTE), 23-8-2010-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) போன்ற புதிய தகுதித் தேவைகளிலிருந்து ஆரம்பத்தில் விலக்கு அளித்திருந்தது என்றும், இருப்பினும், கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE) உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தற்போதைய இந்தத் தீர்ப்புரை, ஆசிரியர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட விலக்கினை மீறி, TET கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் விளைவாக, இந்த ஆசிரியர்கள் இப்போது இரண்டு ஆண்டுகளுக்குள் TET தேர்ச்சி பெற வேண்டும்; இல்லாவிடில், அவர்களின் வேலை பறிக்கப்படும் என்ற நிலை பெருத்த நிர்வாக சிரமத்தையும், ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட சிரமத்தையும் ஏற்படுத்தும்.

பணி நிபந்தனைகளில் இத்தகைய மாற்றம் மற்றும் நியமனத்திற்குப் பின் பதவி உயர்வுக்கான அவர்களின் நியாயமான எதிர்பார்ப்பில் இடையூறு என்பது, ஆசிரியர்களின் உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது என்றும், இது ஆசிரியர்களின் நியமனத்தின்போது, நடைமுறையில் இருந்த சட்டப்பூர்வ விதிகளின்கீழ் முழுமையாக தகுதி பெற்று, முறையாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையோரை நேரடியாக பாதிக்கும்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ நான்கு லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். நியமனம் செய்யப்பட்ட நேரத்தில், அவர்கள் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளையும் பூர்த்தி செய்தவர்கள். சட்டப்படியான மற்றும் முறையான செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். அதோடு 2011-ல் TET அறிமுகப்படுத்தப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பணியில் சேர்ந்தவர்கள்.

இந்த ஆசிரியர்களுக்கு TET-ஐ முந்தைய தேதியிட்டு அமல்படுத்துவது என்பது, அவர்கள் பணியில் தொடர்வதற்கும் மற்றும் பதவி உயர்வுகளுக்கான தகுதிக்கும் நீண்ட காலமாக நிலைநிறுத்தப்பட்ட பணி உரிமைகளில் குறிப்பிடத்தக்க இடையூறை உருவாக்குகிறது., இது மாநிலத்தில் நிர்வாகரீதியாக சாத்தியமற்ற ஒரு நிலையை உருவாக்குகிறது., பள்ளிக் கல்வி அமைப்பின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் கடுமையான அபாயத்தை ஏற்படுத்துகிறது.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (The RTE Act, 2009) பிரிவு 23 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம், 1993 (NCTE Act 1993), பிரிவு 12A ஆகியவற்றில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான் 23.08.2010 அன்று பணியில் இருந்த ஆசிரியர்கள் பாதுகாக்கப்படுவதுடன் பதவி உயர்வுகளுக்கு தகுதி உடையவர்களாக இருப்பதையும் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்திட இயலும்’ என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share