தண்டோராவுக்குத் தடை: தலைமைச் செயலாளர் உத்தரவு!

Published On:

| By Minnambalam

”தொழில்நுட்பம் பெருகிவிட்டதால், இனி தண்டோரா தேவையில்லை” என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதையடுத்து, காவிரி கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இன்றுகூட (ஆகஸ்ட் 3) ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு காவிரிக் கரையோர இடங்களில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரிக் கரையோரப் பகுதிகளில் குளிப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு தமிழக காவல் துறையில் சார்பில் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மக்களுக்கு தண்டோரா போடப்பட்டது. இதுதவிர, முக்கிய அரசு விழிப்புணர்வு பற்றிய நிகழ்வுகள், செய்திகளுக்கும் தண்டோரா போடப்பட்டு வருகிறது.

இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்பி டாக்டர் டி.ரவிக்குமார், தொடர்ந்து கண்டனத்தைப் பதிவுசெய்து வருகிறார். அவர், “பல நாடுகளுக்கு இணையாக தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் நம் நாட்டில், தண்டோரா போடுகிற முறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இன்னமும் கீழான நிலையில் வைத்திருப்பதை இந்த உலகிற்குச் சொல்கிற முறையாக இருக்கிறது” என அடிக்கடி குரல் கொடுப்பதுடன், இதை தடை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஆகஸ்ட் 1ம் தேதி, அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”காவிரியில் வெள்ளப்பெருக்கு குறித்து தண்டோரா போட்டு எச்சரித்தார்களாம். ஒலிபெருக்கி மூலம் சொன்னால் காதில் விழாதா? பல முற்போக்குத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்டோரா போடும் பிற்போக்குத்தனத்தை ஒழிக்க வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.

இறையன்பு உத்தரவு

ADVERTISEMENT

இதுதொடர்பாக தமிழக அரசின் தரப்பில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, இதற்குத் தீர்வுகாணும் விதமாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ”தொழில்நுட்பம் பெருகிவிட்டதால், இனி தண்டோரா தேவையில்லை” என உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மக்களிடம் முக்கியச் செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.

அறிவியல் வளர்ந்துவிட்டது; தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டிய தேவையில்லை. ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வரச் செய்வதன்மூலம் மூலைமுடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும். எனவே தண்டோரா போடக் கடுமையான தடைவிதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என அதில் தெரிவித்துள்ளார்.

எம்.பி. ரவிக்குமார் நன்றி

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எம்.பி. டி.ரவிக்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (ஆகஸ்ட் 3) பதிவிட்டிருக்கும் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “தண்டோரா போடும் முறை ஒழிந்தது. கடந்த 15 ஆண்டுகளாக நான் முன்வைத்துவந்த கோரிக்கை நிறைவேறியது” எனப் பதிவிட்டிருக்கும் அவர், இழிவைத் துடைத்த தமிழக முதல்வருக்கும், தலைமைச் செயலாளர் இறையன்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தமதுது குரலை சமூக ஊடகங்களில் வழிமொழிந்த தோழர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அதுபோல் தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ள முன்னாள் எம்.எல்.ஏ. கணேசன் பீம்ராவ், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட காலத்தில் தண்டோரா போடும் முறையை மாற்றி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்ய அறிவுறுத்திய தஊமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரின் சீர்நோக்கு பார்வைக்கு பாராட்டுக்கள்” எனப் பதிவிட்டுள்ள அவர், ”தண்டோரா தொழில் சம்பந்தபட்டவர்களுக்கு மாற்றுவேலை தர வேண்டும்” என அரசுக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்

5ஜி ஏலம்… மத்திய அரசு செய்த சதி… ஆ. ராசா ஆவேசம்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share