ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரணை நியாயமாக நடக்கவேண்டுமே தவிர, விசாரிப்பவர்கள் யார் என்பது எங்களுக்கு முக்கியமில்லை என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஆகஸ்டு 3) தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் முந்தைய ஆட்சிக்காலத்தில் முதல்வராகவும், நெடுஞ்சாலை துறை அமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறை திட்டங்களை தனது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக திமுகவை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை கடந்த 2018-ம் ஆண்டு விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி ஆரம்பகட்ட விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இறுதி விசாரணை
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. பல மாதங்களாக இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்த நிலையில், இன்று (ஆகஸ்டு 3) இறுதி விசாரணை நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் சிபிஐ விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றமே வழக்கை விசாரிக்கலாம் என்றது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் முறையாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும்
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் தி.மு.க-வின் அமைப்புச் செயலாளரும், இந்த வழக்கை தொடர்ந்தவருமான ஆர்.எஸ்.பாரதி. அப்போது அவர்,
“ஒரு முதலமைச்சரோ அல்லது துறை அமைச்சரோ அவரது துறை சார்ந்த டெண்டர் விடும்போது உறவினர்களோ, நண்பர்களே அதில் இடம்பெறக்கூடாது என்பது உலக வங்கியின் விதி. ஆனால் ரூ.4800 கோடி மதிப்பிலான இந்த டெண்டரில் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் 2 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதில் அப்பட்டமாக ஊழல் நடந்திருப்பதை சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையிட்டபோது வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரைப்பதாக நீதிபதி கூறினர். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தபோது, நியாயமான விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டுமே தவிர விசாரணையை யார் வேண்டுமானாலும் நடத்தட்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைத்தோம்.
இருதரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை, உயர் நீதிமன்றமே இதனை விசாரிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இதை தி.மு.க எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டது. விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்” என்று தெரிவித்தார்.
ரூ.570 கோடி கண்டெய்னரில் சிக்கியது
”ஏற்கனவே 2016-ம் ஆண்டில் தேர்தல் நேரத்தில் கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி சிக்கிய வழக்கும் சிபிஐ-யிடம் தான் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் 6 ஆண்டுகளாகியும் அந்த வழக்கு உரிய முறையில் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது ஏன் என்று தெரியவில்லை.
எனவே அந்த வழக்கைப்போல் இல்லாமல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த டெண்டர் முறைகேடு வழக்கை உரிய முறையில் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டும் வரும் என்று நம்புகிறோம்” என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். தி.முக. யார் மீதும் வீண்பழி சுமத்தாது என்றும் பொய்யான வழக்கை தொடுக்காது என்றும் தெரிவித்தார். ஆதாரத்தோடு வழக்கு தொடர்ந்து அதில் எப்போதும் வெற்றி காண்பது தி.மு.க-வின் பழக்கம் என்றும் அவர் கூறினார்.
ஆண்மை இருந்தால் வழக்கு தொடரட்டும்
மேலும் தி.மு.க மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, “இந்த ஆட்சியின் மீது களங்கம் சுமத்த நினைத்தவர்கள் ஆண்மை இருந்தால் நீதிமன்றத்துக்கு சென்று புகார் அளிக்கட்டும்” என்று சவாலும் விடுத்தார்.
–கலைவாணி
உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?