அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்குத் தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தனித்தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி அளித்தார். மேலும் அதில் விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து பிரதான வழக்குகளைத் தள்ளிவைத்திருந்தார்.
இதனையடுத்து ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு, அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அதில், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும், பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும். பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், விசாரணையை 3 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனிநீதிபதிக்கு உத்தரவிட்டனர்.
ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை

அதன்படி ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு நாளை (ஆகஸ்ட் 4) விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் ஒன்றை அளித்துள்ளனர். அதில், அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க வேண்டாம் என்றும், அவருக்குப் பதில் வேறு ஒரு நீதிபதிக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தொடர்ந்து தங்களுக்கு எதிராக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கருத்து கூறி வருவதாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாகக் கடிதத்தில், கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதாக மனுதாரர்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு மனுதாரரான ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் பொதுக்குழுவை அணுகாமல், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுவதாகவும், நீதிமன்றத்தின் மூலம் சாதிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்திருப்பது வழக்கிற்கு சம்மந்தமில்லாத கருத்துகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!