5ஜி ஏலம்… மத்திய அரசு செய்த சதி… ஆ. ராசா ஆவேசம்!

அரசியல்

5ஜி அலைக்கற்றை ஏலம், நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு இணைந்து நடத்திய கூட்டு சதியா? என்று திமுக எம்பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 26ம் தேதி ஆன்லைனில் தொடங்கியது. 600, 700, 800, 900, 1800, 2100, 2300, 2500 மற்றும் 3300 மெகாஹெர்ட்ஸ் என 9 விதமான பேண்ட்கள் ஏலம் விடப்பட்டன. அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல், கவுதம் அதானியின் டேட்டா நெட்வொர்க்ஸ் மற்றும் வோடபோன் ஐடியா இடையே ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன.

குறைவான தொகையில் முடிந்த 5ஜி ஏலம்!

6 நாட்கள் நடைபெற்ற 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தின் 40 சுற்றுகள் முடிவில் மொத்தம் 1.50 லட்சம் கோடி பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். ஏலம் ஆரம்பிக்கும் போது சுமார் 4.30 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்பானி, அதானி போன்ற இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பங்கு கொண்ட 5ஜி ஏலம் வெறும் 1.5 லட்சம் கோடியில் முடிந்தது பல கேள்விகளை எழுப்பியது.

பாஜக அரசுக்கு எதிராக கேள்வி!

10 ஆண்டுகளுக்கு முன்னர் அதுவும் 2ஜி அலைக்கற்றையில் ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு என்பதை ஊழல் என்று ஊடகங்கள் வர்ணித்தன. இந்நிலையில் 5ஜி அலைக்கற்றை எதிர்ப்பார்க்கப்பட்டதை விட சுமார் ரூ.2.80 லட்சம் கோடி குறைவாக ஏலம் சென்றுள்ள நிலையில் ஏன் தற்போது ஊழல் என்று கூறவில்லை என சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக டிவிட்டரில் #5G_Scam_BJP என்ற ஹேஷ்டேக் மூலம் மத்திய அரசுக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.

5ஜி ஏலம் மத்திய அரசின் மிகப்பெரிய ஊழல்!

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 3) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி ஆ.ராசா 5ஜி ஏலம் குறித்து பேசினார்.

அவர் கூறுகையில், “வெறும் 30 மெகாஹெர்ட்ஸ் கொண்ட 2 ஜி அலைகற்றையை நான் ட்ராய் பரிந்துரையின் அடிப்படையில் கொடுத்த போது ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று அன்று இருந்த சிஏஜி வினோத் ராய் ரிப்போர்ட் கொடுத்தார். ஆனால் இன்று ஏலம் விட்டிருப்பது 51 ஜிகாஹெர்ட்ஸ். 2ஜியில் பேச மட்டும் தான் முடியும்.

5ஜியில் இணையத்தின் வேகம் பலமடங்கு அதிகமாக இருக்கிறது. இதன் சிறப்பம்சங்களை எல்லாம் வைத்து பார்த்தால் 5ஜி ஏலம் குறைந்தது 5 லட்சம் கோடி முதல் 6 லட்சம் கோடி வரை ஏலத்தில் சென்றிருக்க வேண்டும். குறைந்த ஏலத்தில் விற்றதற்கு மத்திய அரசின் திட்டமிடலில் நடந்த தோல்வியா அல்லது 4,5 நிறுவனங்களுடன் சேர்ந்து மத்திய அரசு கூட்டு சதி செய்துவிட்டதா என்பதை விசாரிக்க வேண்டும்.

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது குறித்து இந்த அரசு விசாரிக்க வேண்டும் இல்லை என்றால் இந்த அரசு தூக்கி எறியப்பட்டவுடன் அடுத்த அரசு விசாரிக்கும். 2ஜி ஊழல் என்பது அன்றைக்கு ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக வினோத் ராய் என்ற தனி மனிதரையும், அவர் இருந்த சிஏஜி என்ற அரசியல் சட்ட அமைப்பையும் பயன்படுத்தி எனக்கு எதிராக மிகப்பெரிய சதியை தீட்டினார்கள் என்று எனது புத்தகத்திலேயே கூறி இருக்கிறேன். ஆனால் இதுவரை வினோத் ராயிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை” என்று கூறினார்.

2ஜி விவகாரம்!

கடந்த 2010ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக முன்னாள் ஒன்றிய தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் அறிக்கை வெளியிட்டார். இதை மேற்கோள்காட்டி நாட்டின் பல்வேறு ஊடகங்களும் 2ஜி அலைக்கற்றையில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக என்று செய்தி வெளியிட்டன. அதனைத்தொடர்ந்து தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

5G அலைக்கற்றை ஏலம் : போட்டி போடும் நிறுவனங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0

1 thought on “5ஜி ஏலம்… மத்திய அரசு செய்த சதி… ஆ. ராசா ஆவேசம்!

  1. pls. dont use translate app. செய்தியில் எழுத்துப் பிழைகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *