தீராத தலைவலியா? – சைனஸ் பிரச்சனையா இருக்கலாம்… கட்டுப்படுத்துவது எப்படி?

Published On:

| By Santhosh Raj Saravanan

Symptoms of Sinusitis and how to prevent

சைனஸ் பிரச்சனையின் அறிகுறிகள் மற்றும் அது வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.

தற்போது பலரும் தங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருப்பதாகக் கூறுவதைக் காண முடிகிறது. சைனஸ் தலைவலியை சரிசெய்ய அவர்கள் பல முயற்சிகளையும் எடுக்கிறார்கள். சைனஸ் பிரச்சனை (sinus infection) உள்ளவர்களுக்கு இருமல், சளி தொல்லை அடிக்கடி ஏற்படுவதால் அவதிப்படுவதையும் காண முடிகிறது. சைனஸ் என்பவை மூக்கைச் சுற்றி அமைந்துள்ள காற்று நிரம்பிய சிறிய குழிகளாகும். இவை அழற்சியடையும்போதோ அல்லது தொற்றுக்குள்ளாகும்போதோ ஒருவருக்கு சைனஸ் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. காற்றில் உள்ள நுண்ணிய தூசு, புகை மற்றும் பிற மாசுபாடுகள் மூக்கின் உள் அடுக்கைப் பாதித்து ஒவ்வாமை மற்றும் தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கின்றன. இதனால் சைனஸ் பாதிப்பு மேலும் அதிகமாகிறது.

ADVERTISEMENT
சைனஸ் அறிகுறிகள்

சைனஸ் நோயின் முக்கிய அறிகுறிகளாக தொடர்ச்சியான மூக்கடைப்பு, சளி, இருமல் ஆகியவை உள்ளன. அதாவது அடிக்கடி இருமல், சளி வந்தால் அதனை புறக்கணித்துவிடக்கூடாது. அதனைத் தொடர்ந்து தலைவலி, முகம் மற்றும் கண்களைச் சுற்றி வலி அல்லது அழுத்தம் இருப்பது. குறிப்பாக கண்களை சுற்றி வலி (sinusitis symptoms) இருந்தால் அது சைனஸ் அறிகுறியாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

இதேபோல அடிக்கடி தொடர்ச்சியாக தும்மல் ஏற்படுவதும் சைனஸ் அதிகமாகிவிட்டதன் அறிகுறிதான். அதேபோல சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலும் இந்த அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை ஒரு சாதாரண சளி பிரச்சனை என்று மக்கள் புறம்தள்ளும்போதுதான் சைனஸ் பாதிப்பு தீவிரம் அடைகிறது.

ADVERTISEMENT
சைனஸ் ஏற்படுவது ஏன்?

மாசுபாடு மட்டுமின்றி தூசி நிறைந்த சூழல்களில் நீண்ட நேரம் இருப்பது, புகைப்பிடித்தல், பலவீனமான நோய் எதிர்ப்பு (Weak immune system) மண்டலம், அடிக்கடி ஏற்படும் ஒவ்வாமைகள் மற்றும் வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் ஆகியவையும் சைனஸ் நோய்க்கு முக்கிய காரணமாக உள்ளன. குறிப்பாக குளிரில் நீண்ட நேரம் இருப்பது, ஏசியில் அதிக நேரம் இருப்பது ஆகியவை சைனஸ் பிரசனையை தூண்டுகின்றன. குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இதனால் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.

சைனஸ் வராமல் தடுப்பது எப்படி?

மக்கள் வெளியே செல்லும்போதெல்லாம் நல்ல தரமான மாஸ்க் அணிந்து (Wearing a mask) செல்ல வேண்டும். குறிப்பாக அதிக தூசி மற்றும் புகை உள்ள பகுதிகளில் மாஸ்க் அணிவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போதுமான அளவு தண்ணீர் அருந்துவது, உங்கள் வீட்டையும் வேலையிடத்தையும் தவறாமல் சுத்தம் செய்வது, புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது மற்றும் சமச்சீரான உணவை உட்கொள்வது ஆகியவை மூலம் சைனஸ் வராமல் தடுக்க முடியும்.

ADVERTISEMENT

தொடர்ச்சியான மூக்கடைப்பு, தலைவலி அல்லது சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதற்குப் பதில் காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுக வேண்டும். சரியான நேரத்தில் கண்டறிந்து முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம், சைனஸ் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த முடியும். அதிகரித்து வரும் மாசுபாட்டிற்கு மத்தியில், சைனஸ் (How to control sinus) போன்ற நோய்களைத் தடுப்பதற்கு விழிப்புணர்வும் எச்சரிக்கையுமே மிகவும் அவசியம். சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுபட அடிக்கடி ஆவி பிடித்தல், உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுதல் போன்றவற்றையும் செய்யலாம்.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share