சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி முனை என பிரதமர் பெயரிட்டது சர்ச்சையான நிலையில் அதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று (ஆகஸ்ட் 27) விளக்கம் அளித்துள்ளார்.
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் கடந்த 23ஆம் தேதி வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய பிரக்யான் ரோவரும் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, சந்திரயான்-2 தரையிறங்கியபோது, அதன் லேண்டர் மோதி விபத்துக்குள்ளான இடத்திற்கு திரங்கா முனை (Tiranga Point) என்றும், சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி முனை (Shiv Shakti Point) என்றும் பிரதமர் மோடி பெயரிட்டது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
விஞ்ஞானிகளால் கடுமையாக உழைத்து பெறப்பட்டுள்ள இந்த சாதனைக்கு மத சாயம் பூசுவது போல உள்ளதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் 1919ஆம் ஆண்டு சர்வதேச வானவியல் கழகம் அமைக்கப்பட்ட பின்னர், அக்கழகத்தின் விதிப்படிதான் பெயர் வைக்க இயலும் என வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி முனை என பெயரிட்டதில் எந்த சர்ச்சையும் இல்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் வெங்கனூரில் உள்ள பௌர்ணமிகாவு-பத்ரகாளி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”இந்தியா ஏற்கனவே நிலவு மண்டலங்களுக்கு சில பெயர்களை வழங்கியுள்ளது. விண்கலம் தரையிறங்கும் இடத்திற்கு பெயரிட இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. தரையிறங்கும் இடத்திற்கு இப்படி பெயர் வைப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே சந்திரனில் சாராபாய் பள்ளம் உள்ளது.
ஒவ்வொரு நாடும் தங்கள் பெயர்களைக் கொடுக்கலாம். மற்ற நாடுகளும் தங்கள் அறிவியல் சாதனைகள் தொடர்பாக இடங்களுக்கு பெயர் வைக்கின்றன. நிலவுக்கு பயணம் மேற்கொள்ளும் நாடுகள் பின்பற்றும் பாரம்பரியம் இது” என சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆசிய விளையாட்டு: இந்திய கால்பந்து அணியில் 3 தமிழக வீராங்கனைகள்!
