கடலூர் மாவட்டம் வடலூரில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த பாமக திட்டமிட்டுள்ளது.
இதற்காக மாவட்ட பாமக நிர்வாகிகள் போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதுதொடர்பாக ஆலோசனை செய்த போலீசார் அனுமதி கொடுக்க மறுத்துள்ளனர்.
இதுகுறித்து கடலூர் பாமக நிர்வாகிகள் தரப்பில் நாம் கேட்டபோது.
“வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வடலூரில் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. இதில் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸும் கலந்துகொள்ள இருந்தார்.
இதனை முன்னிட்டு மாவட்ட கட்சி நிர்வாகிகள் கடலூர் எஸ்.பி. ராஜாராமை சந்தித்து பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்குமாறு கேட்டனர்.
அவர், நீங்கள் எந்த பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துகிறீர்களோ. அந்த பகுதி காவல் நிலையத்துக்குச் சென்று மனு கொடுங்கள் என்று கூறிவிட்டார்.
இதையடுத்து வடலூர் காவல் நிலையத்துக்குச் சென்று காவல் ஆய்வாளர் ராஜாவிடம் மனு கொடுத்தனர். அவர் உயரதிகாரியிடம் ஆலோசித்துவிட்டுச் சொல்கிறேன் என்றார். ஆனால் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்துவிட்டு அனுமதி மறுத்துவிட்டார்” என்றனர்.
இதுகுறித்து வடலூர் காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது,
“பாமகவினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டனர். காவல் ஆய்வாளர் ராஜா இதுகுறித்து டிஎஸ்பி ராஜ்குமாரிடம் தெரிவித்தார். அனுமதி கொடுப்பது தொடர்பாக டிஎஸ்பி, எஸ்.பி.ராஜாராமிடம் ஆலோசனை செய்திருக்கிறார்.
ஏற்கனவே நெய்வேலியில் பாமகவினர் என்.எல்.சி நிறுவனத்துக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிந்தது. இதில் போலீசாரும் காயமடைந்தனர்.
இந்நிலையில் இது கட்சி சார்ந்த பொதுக்கூட்டம் என்று சொன்னாலும், என்.எல்.சி. நிறுவனத்துக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பேச பாமகவினர் திட்டமிட்டுள்ளனர்.
அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை ” என்று தெரிவித்தனர்.
போலீஸ் அனுமதி மறுப்பைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்குச் சென்று பொதுக்கூட்டத்துக்கு அனுமதி பெறத் திட்டமிட்டு வருவதாக பாமக வழக்கறிஞர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன.
வணங்காமுடி, பிரியா
தனிக்கட்சி : சஸ்பென்ஸ் வைத்த பன்னீர்
சோசியல் மீடியாவில் நாறடித்துவிடுவோம்: ஜெயக்குமார் எச்சரிக்கை!