இந்திய விமானி ஸ்மித் மச்சாரை தாக்கிய மர்ம துணை விமானி யார்? பாகிஸ்தானில் பயிற்சி… ஈரான் தொடர்பு?

Published On:

| By Mathi

Omani co-pilot

துபாய் விமானத்தில் நடுவானில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் தாக்கிய துணை விமானி யார் என்பது குறித்து பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஃப்ளைதுபாய் நிறுவனத்தின் FZ1073 விமானம் துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி சென்றபோது, விமானிகள் அறைக்குள் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை துணை விமானி கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த தாக்குதலுக்கு பிறகு விமானம் திடீரென பல ஆயிரம் அடி கீழே இறங்கியது. காயமடைந்த நிலையிலும் விமானிகள் அறையின் கதவை திறந்த ஸ்மித் மச்சார், பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்ளே வருவதற்கு வழி ஏற்படுத்தினார்.

இதையடுத்து தாக்குதல் நடத்திய துணை விமானி மடக்கிப் பிடிக்கப்பட்டார். விமானத்தில் இருந்த மாற்று விமானிகள் விமானத்தை சவுதி அரேபியாவின் தபூக்கில் பாதுகாப்பாக தரையிறக்கினர்.

ADVERTISEMENT

துணை விமானி யார்?

தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள துணை விமானியின் பெயர் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அவர் ஓமன் நாட்டை சேர்ந்தவர் என இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது வயது, சொந்த ஊர், குடும்ப பின்னணி, விமான பயிற்சி பெற்ற இடம், இதற்கு முன்பு எந்த விமான நிறுவனங்களில் பணியாற்றினார், மொத்தமாக எத்தனை மணி நேரம் விமானங்களை இயக்கியுள்ளார் போன்ற விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

ADVERTISEMENT

அவர் சுமார் 8 மாதங்களுக்கு முன்புதான் ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்ததாக அவருடன் பணியாற்றிய விமானி ஒருவர் இஸ்ரேலிய ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

அதே விமானி, துணை விமானியின் மத பழக்கவழக்கங்கள் குறித்தும் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் அடிக்கடி தொழுகையில் ஈடுபடுவார் என்றும் பெண்களுடன் கைகுலுக்க மாட்டார் என்றும் அந்த சக விமானி கூறியதாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. ஒருவரது மத பழக்கவழக்கங்களை மட்டும் வைத்து தாக்குதலுக்கான நோக்கத்தை தீர்மானிக்க முடியாது. தாக்குதலுக்கான காரணம் என்ன என்பதும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவரா?

இந்த நிலையில் துணை விமானியின் விமான பயிற்சி பின்னணி குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

குறிப்பாக அவர் பாகிஸ்தானில் விமான பயிற்சி பெற்றாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதியும் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரானுடன் தொடர்பா?

இந்த சம்பவத்தில் எழுந்துள்ள மற்றொரு முக்கிய கேள்வி துணை விமானிக்கு ஈரானுடன் தொடர்பு இருக்கிறதா என்பதாகும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடமும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது தனக்கு கிடைத்து வரும் தகவல்களின் அடிப்படையில் அத்தகைய சாத்தியம் இருக்கலாம் என்ற வகையில் அவர் பதிலளித்தார். ஆனால் ஈரான் தொடர்பை உறுதி செய்யக்கூடிய குறிப்பிட்ட ஆதாரம் எதையும் அவர் வெளியிடவில்லை.

இதற்கு மாறாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் துணை விமானிக்கும் ஈரானுக்கும் நேரடி தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

நெதன்யாகு கூறியது என்ன?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடமும் ஈரான் தொடர்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

தற்போதைய நிலையில் அதுகுறித்து இறுதி முடிவுக்கு வருவது முன்கூட்டியது என்று தெரிவித்த அவர், விசாரணையின் மூலம் சம்பவத்தின் பின்னணி முழுமையாக கண்டறியப்படும் என்றார்.

அதே நேரத்தில், துணை விமானி தீவிர இஸ்லாமிய சிந்தனையால் ஈர்க்கப்பட்டிருந்ததற்கான அறிகுறிகள் கிடைத்திருப்பதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

விமானத்தை கீழே விழச் செய்யும் நோக்கம் அவருக்கு இருந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளும் இருப்பதாக அவர் கூறியுள்ளார். எனினும் விசாரணை முடியாத நிலையில் இறுதி முடிவுக்கு வரவில்லை என்பதையும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இஸ்ரேல் தூதர் யோசி ஷெல்லியும், தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் தற்போதே முடிவுக்கு வருவது முன்கூட்டியது என்றும் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத தொடர்பு இருக்கிறதா?

இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதலா, தீவிரவாத நோக்கத்துடன் நடத்தப்பட்டதா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக அட்டர்னி ஜெனரல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தாக்குதலுக்கான நோக்கம் என்ன, இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா, வேறு யாருடைய வழிகாட்டுதல் இருந்ததா, தீவிரவாத நடவடிக்கையுடன் தொடர்பு உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது.

விசாரணை முடிவடைவதற்கு முன்பு சம்பவம் குறித்து ஊகங்களை பரப்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஓமன் விமானிக்கு இஸ்ரேல் செல்ல அனுமதி எப்படி?

துணை விமானி ஓமன் நாட்டை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியான பிறகு மற்றொரு முக்கிய கேள்வியும் எழுந்துள்ளது. ஓமனுக்கும் இஸ்ரேலுக்கும் தூதரக உறவு இல்லை. இப்படிப்பட்ட சூழலில் ஓமன் நாட்டை சேர்ந்த விமானி, இஸ்ரேலுக்கு செல்லும் விமானத்தில் எவ்வாறு பணியாற்ற அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அவர் விமானத்தில் பணியாற்றுவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு சோதனைகள் என்ன, அவரது பின்னணி எவ்வாறு சரிபார்க்கப்பட்டது என்பதும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட துணை விமானியிடம் மற்றொரு நாட்டின் பாஸ்போர்ட் இருந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இரண்டாவது பாஸ்போர்ட் இருந்ததாக இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

சவுதியில் இருந்து அபுதாபிக்கு மாற்றம்

விமானம் தபூக்கில் தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து தாக்குதல் நடத்திய துணை விமானி சவுதி அரேபிய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தார்.
அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் இணைந்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அக்டோபர் 1-ஆம் தேதி அவர் அபுதாபிக்கு அனுப்பப்பட்டதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

ஸ்மித் மச்சார் உடல்நிலை எப்படி?

தாக்குதலில் பலத்த காயமடைந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு தபூக்கில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவர் தற்போது நலமாக இருப்பதாகவும், உடல்நிலை தொடர்ந்து தேறி வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் மருத்துவமனைக்கு சென்று ஸ்மித் மச்சார் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.

விமானத்தில் இருந்தவர்களை காப்பாற்ற ஸ்மித் மச்சார் மேற்கொண்ட நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share