வரும் நிதியாண்டில் சிறுதானிய திருவிழா நடத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 21) வேளாண் பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து பேசி வருகிறார்.
இதில் சிறுதானிய விவசாயிகளுக்கான அறிவிப்பில், “கம்பு, கேழ்வரகு, வரகு, சோளம், திணை, குதிரைவாலி, சாமை ஆகிய சிறு குறு தானியங்கள் வறட்சியிலும் வளர்பவை. வளமற்ற மண்ணிலும் நலம்பெற்று துளிர்பவை.
தமிழ்நாட்டில் மீண்டும் அவற்றை செழிக்க செய்யும் பொருட்டும், சிறுதானிய பரப்பு, உற்பத்தி நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் பொருட்டும்,
கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 மாவட்டங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட இரண்டு சிறு தானிய மண்டலங்களுடன் உழவர்களின் கோரிக்கைகளை ஏற்று,
நாமக்கல், திருப்பூர், கோயமுத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும்.
சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகளின் பொது சபை அறிவித்திருப்பதை ஒட்டி தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சிறுதானிய திருவிழாக்களும் இவ்வியக்கத்தின் மூலம் நடத்தப்படும்.
வரும் ஆண்டில் ஒன்றிய மாநில அரசு நிதி உதவியுடன் ரூ.82 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா